Advertisement

பெற்றோருக்கு எஸ்.பி., அறிவுறுத்தல் குழந்தைகளுடன் பேசுங்க!போக்சோ வழக்கு அதிகரிப்பு எதிரொலி

ADVERTISEMENT
கோவை;''மாவட்டத்தில் போக்சோ தொடர்பான வழக்குகள் நடப்பாண்டு அதிகரித்துள்ளதால், பெற்றோர் தினமும் தங்கள் குழந்தைகளுடன், அதிக நேரம் பேச வேண்டும். பாதுகாப்பான தொடுதல் குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும்,'' என, கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுமக்கள் தொலைத்த, மற்றும் திருடப்பட்ட, 205 மொபைல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, கோவை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட எஸ்.பி., பத்ரி நாராயணன் மொபைல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

அதன் பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கோவை மாவட்ட போலீஸ் சார்பில், பொதுமக்களுக்கு, வேண்டுகோள் முன்வைக்கப்படுகிறது. பெற்றோர் குழந்தைகளுக்கு பாதுகாப்பான தொடுதல் குறித்து கற்றுத்தர வேண்டும். அவர்களுடன் தினமும் அதிக நேரம் பேச வேண்டும்.

பள்ளியில், வெளியிடங்களில் அன்றைய தினம் நடந்த சம்பவங்களை கேட்டறிய வேண்டும். ஏனென்றால், இந்தாண்டு மட்டும், 205 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்தாண்டில், மட்டும் 40 கொலைகள் நடந்துள்ளன. இதில், 12 குடும்பத்துக்குள்ளும், சில கொலைகள் நண்பர்களுக்கும் நடந்துள்ளன.

பைக்கில் செல்வோர், தலைக்கவசம் அணிவது, காரில் செல்வோர் சீட் பெல்ட் அணிவது கட்டாயம். சமீப காலமாக கோவையில் ஆன்லைன் மோசடிகள், வேலை வாங்கி தருவதாக மோசடி செய்யும் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

இதுபோன்ற மோசடிகளில், மக்கள் ஏமாற வேண்டாம்.

நடப்பாண்டு சைபர் கிரைம் குற்றவழக்குகளில் ரூ.18 கோடி வரை மோசடி நடந்துள்ளது. போலீசாருக்கு மூன்றாவது கண், கண்காணிப்பு கேமராக்கள் எனில், நான்காவது கண் பொதுமக்கள்தான்.

கடந்தாண்டு, 540 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு, 662 கிலோ வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டு இதுவரை, 911 மொபைல்போன்கள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மொபைல்கள் தொலைந்தது குறித்து, 1,853 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இவ்வாறு, அவர் கூறினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement