Advertisement

செய்திகள் சில வரிகளில்.. . ஈரோடு

அ.தி.மு.க., கொடியை
பயன்படுத்த எதிர்ப்பு

அ.தி.மு.க. கொடியை, பன்னீர் செல்வம் தரப்பினர் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனில், நகர அ.தி.மு.க., செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று புகாரளித்தனர்.
அ.தி.மு.க., கொடியை பன்னீர் செல்வம் தரப்பினர் சட்ட விரோதமாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக, போலீசார் கூறியதாக அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

மத்திய அரசின் திட்டத்தில்
மானிய சிலிண்டர் வழங்கல்
மத்திய அரசின் திட்டத்தில், மானியத்தில் சிலிண்டர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று, தாராபுரம் அருகே கொளிஞ்சிவாடியில் நேற்று நடந்தது. பா.ஜ., நகர தலைவர் சதீஷ் தலைமை வகித்தார்.
தேர்வு செய்யப்பட்ட, 33 பேரில், 13 பேருக்கு, மாவட்ட தலைவர் மங்களம் ரவி, சிலிண்டருடன் காஸ் அடுப்பு வழங்கினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் சிவசுப்பிரமணியம், விஜயகுமார், கவுன்சிலர் மீனாட்சி கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரூ.1.28 லட்சத்துக்கு
தேங்காய் விற்பனை
எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 12,032 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 24.92 ரூபாய் முதல், 27.08 ரூபாய் வரை, 5,022 கிலோ தேங்காய், 1.28 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

டாஸ்மாக் கடையை
அகற்ற வலியுறுத்தல்
பவானி, ஜம்பையை சேர்ந்த சேகர் என்பவர் தலைமையில், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், நேற்று வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
பவானி-ஆப்பக்கூடல் சாலையில், பண்டாரப்பிச்சை கோவில் அருகே, டாஸ்மாக் கடை (எண்: 3422) செயல்படுகிறது. இதன் அருகே கோவில், பள்ளி, மாணவ, மாணவியர் தங்கும் அரசு விடுதி, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் உள்ளன. பிரதான சாலை வளைவு பகுதியில் மதுக்கடை உள்ளதால், அடிக்கடி விபத்து நடக்கிறது. கடையை அகற்ற பலமுறை முறையிட்டும், பலனில்லை. அசம்பாவித சம்பவம் நிகழும் முன், டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள்
தினத்தில் உறுதிமொழி
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஈரோடு எஸ்.கே.சி., சாலை மாநகராட்சி நடுநிலை பள்ளியில், 'எனது பள்ளியில் வேற்றுமையை ஒழிப்போம்' என்று உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. தலைமை ஆசிரியை சுமதி வரவேற்றார். பிசியோதெரபி டாக்டர் உதயா அபிராமி, சைகை மொழியின் முக்கியத்துவத்தை தெரிவித்து, அதுபற்றி விளக்கினார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து செயல்படுவது குறித்து, ஆசிரியர்கள் பேசினர். ஆசிரியை மல்லிகா நன்றி கூறினார்.

1,15௦ கிலோ ரேஷன் அரிசி
பறிமுதல்; 2 பேர் கைது
ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர், டி.எஸ்.பி., சுரேஷ்குமார் மேற்பார்வையில், அந்தியூர் அருகே கெட்டி விநாயகர் கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு பொலிரோ லோடு வேனை சோதனையிட்டனர். வாகனத்தில், 23 மூட்டைகளில் தலா, 50 கிலோ வீதம், 1,150 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அரிசி மூட்டைகள் மீது வாழை இலை கட்டுகளை வைத்து மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
வேனில் வந்த சத்தியமங்கலம், வரதம்பாளையம், பத்ரகாளியம்மன் கோவில் தெரு சக்திவேல் மனைவி நந்தினி; சத்தி, வி.என்.எஸ்., நகர் குணசேகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வேனுடன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

மகுடேஸ்வரர் கோயிலில்
1,008 சங்காபிஷேக விழா
கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள்கிழமை, சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் உலக நன்மை வேண்டி, சிவாலயங்களில் சங்கு பூஜை நடத்துவது வழக்கம்.
இதன்படி கார்த்திகை மாத மூன்றாவது சோம வாரமான நேற்று, கொடுமுடி மகுடேஸ்வரர், வீர நாராயண பெருமாள் கோவிலில், 1,008 சங்காபிஷேக விழா நடந்தது. முன்னதாக காலையில், சிவலிங்க வடிவில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, 108 சங்குகளுக்கு ஹோமம் நடந்தது. இதையடுத்து மகுடேஸ்வரருக்கு, 16 வித திரவிய அபிஷேகம் நடந்தது.
இதையடுத்து மதியம் பல்வேறு வண்ண மலர்களைக் கொண்டு தாமரை வடிவில் அமைக்கப்பட்டிருந்த, 1,008 சங்குகளுக்கு பஞ்சாட்சர வழிபாடு, ஹோமம் நடந்தது. மாலையில் 1,008 சங்குகளுக்கு விசேஷ மூலிகை பொருட்கள் கலந்த புனித நீரால் அபிஷேகம், ஆராதனை மற்றும் வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

உயர்த்தப்பட்ட வாகன வரிகளை
திரும்ப பெறக்கோரி முறையீடு
தமிழ்நாடு உழைக்கும் கரங்கள் அனைத்து வாகன ஓட்டுனர் நலச்சங்க மாநில தலைவர் செல்வம் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கினர். மனுவில் கூறியிருப்பதாவது:
கொரோனா தொற்றால் மோட்டார் தொழில் கடுமையாக பாதித்துள்ளது. தவிர ஆண்டு தோறும் இன்சூரன்ஸ் கட்டண உயர்வு, டோல்கேட் கட்டண உயர்வு, ஆன்லைன் அபராதம் போன்றவற்றால் வாடகை வாகன தொழில் செய்வோர் பாதிக்கின்றனர்.
இந்நிலையில் புதிய வாகனங்களுக்கு சாலை வரியை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். வாடகை கேப் வாகனங்களுக்கு மேலும் பல மடங்கு உயர்த்தியதால், அத்தொழில் மேலும் பாதிக்கும். வாகன தொழிலை காக்கும் வகையில் வரி உயர்வுகளை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement