Advertisement

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

அம்மா உணவகத்துக்கு
செல்ல முடியாமல் தவிப்பு

ஈரோட்டில் காந்திஜி சாலையில் அம்மா உணவகம் உள்ளது. இதன் மூலம் தினமும், 200க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். காந்திஜி சாலையில் இருபுறமும் சாக்கடை, மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்காக, ஆறு 6 மாதங்களுக்கு முன் குழி தோண்டினர். பெரும்பாலான இடங்களில் கட்டுமான பணி மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக அம்மா உணவகம் முன் பணி கிடப்பில் உள்ளது. இதனால் ஏழை மக்கள், அம்மா உணவகத்துக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். தற்காலிக ஏற்பாடாவது செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
குறைதீர் கூட்டத்தில்
நலத்திட்ட உதவி
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதி உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக, 306 மனுக்கள் வரப்பெற்றன. அந்தந்த துறை விசாரணைக்காக, அனுப்பி வைக்கப்பட்டன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள்; மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், காசிபாளையம் பகுதி சிறுவன் சர்வேஸ்வரன் குடும்பத்துக்கு, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 40,828 ரூபாய் மதிப்பில் மாவரைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.

ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும்ஆலைக்கு எதிராக போராட்டம்
அந்தியூர் யூனியன் மைக்கில்பாளையம் பஞ்., பொய்யேரிக்கரை பஸ் நிறுத்தம் அருகில், அரசு அனுமதியின்றி தனியார் ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்குகிறது. இங்கிருந்து பலமான அதிர்வு மற்றும் மாசு காரணமாக, மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே நிறுவனத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று, பலதுறை அதிகாரிகளிடம் மக்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் அந்தியூர் யூனியன் அலுவலகம் எதிரே, சி.பி.எம்., அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. தாலுகா செயலாளர் பழனிசாமி, சி.பி.ஐ., தாலுகா செயலாளர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பவானி டி.எஸ்.பி., அமிர்தவர்ஷினி, அந்தியூர் போலீசார், யூனியன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். முதற்கட்டமாக நிறுவனத்தின் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். அப்படி துண்டித்தால் மட்டுமே இடத்தை விட்டு வெளியேறுவோம் என்று கூறி, போராட்டத்தை தொடர்ந்தனர்.

பைக்கில் இருந்து விழுந்தவர் பலி
ஈரோடு, ஆணைக்கல்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 47; தனியார் நிறுவன தொழிலாளி. இவரின் மனைவி மைதிலி. தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். வேலைக்குநேற்று முன்தினம் பைக்கில் சென்ற பாலசுப்பிரமணியம், கருங்கல்பாளையம், கக்கன் நகர் பகுதியில் தடுமாறி விழுந்து மயங்கினார். தகவலறிந்து சென்ற மைதிலி, கணவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

வெள்ளாடுகளை திருடிதப்பிய 2 பேர் கைது
கோபி அருகே கூகலுாரை சேர்ந்தவர் மெய்யப்பன், 54, பெயின்டர்; நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, நாய் குலைக்கும் சத்தம் கேட்டு வெளியே சென்று பார்த்தார். அப்போது வீட்டு தொழுவத்தில் கட்டியிருந்த இரு ஆடுகளை திருடிய நான்கு பேர், இரு பைக்கில் தப்ப முயன்றனர். அவர் சத்தமிடவே அக்கம்பக்கத்தினர் அவர்களை துரத்தினர். இதில் இருவர் மட்டும் ஆடுகளுடன் பிடிபட்டனர். சிறுவலுார் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அத்தாணியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 22; கோபியை சேர்ந்த, 15 வயது சிறுவன் என தெரிந்தது. இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். கோபாலகிருஷ்ணனை கோபியில் உள்ள மாவட்ட சிறையிலும், சிறுவனை கோவை சீர்திருத்தப்பள்ளியிலும் அடைத்தனர். வழக்கில் கோபியை சேர்ந்த பிரகாஷ், 35, கிரண், 18, என இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆகாயத்தாமரை பிடியில்
கூகலுார் கிளை வாய்க்கால்
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு திறக்கப்படுகிறது. இந்நிலையில் பாரியூர் அருகே கூகலுார் கிளை வாய்க்காலில், ஆகாயத்தாமரை செடி ஆக்கிரமித்துள்ளதால், பாசனத்துக்கு சீராக தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பால், நீரின் வேகம் சீராக இருப்பதில்லை. ஆகாயத்தாமரையை அகற்றி, கோபி டவுன் பகுதி கழிவுநீர், கீரிப்பள்ள ஓடை வழியாக, வாய்க்காலில் கலப்பதை தடுத்த வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறையினர் கூறுகையில், 'ஆகாயத்தாமரை செடிகளை, மருந்து தெளித்து அழிக்கலாம். மழைக்காலமாக இருப்பதால் இயலாத காரியமாக உள்ளது. மழைக்காலம் முடிந்ததும், மருந்து தெளிக்க ஏற்பாடு செய்யப்படும்' என்றனர்.

14 சத்துணவு
கூடம் திறப்பு
அந்தியூர் யூனியனுக்கு உட்பட்ட சந்திபாளையம், பிரம்மதேசம், புதுக்கரடியானுார் உள்பட, 14 இடங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில், சத்துணவு திட்டத்துக்கான சமையலறை கட்டப்பட்டது. அந்தியூர், எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க., நிர்வாகிகள், யூனியன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


சாரதா மாரியம்மன் கோவிலில்
மண்டபம் இடிக்கும் பணி தீவிரம்
கோபி கடைவீதி பகுதியில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாரதா மாரியம்மன் கோவிலில், 13 ஆண்டுக்கு பின், நான்காவது முறையாக கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது.
இதையடுத்து கோபுரங்களுக்கு, 15 லட்சம் ரூபாய் செலவில், வர்ணம் பூசும் பணிக்கு, கடந்த செப்., மாதம் பாலாலயம் நடந்தது. தற்போது மூலவர் மற்றும் ராஜகோபுரத்துக்கு, வெள்ளை பூச்சு செய்யும் பணி முடிந்துள்ளது.
இதற்கிடையே கான்கிரீட் கட்டமைப்புக்காக, முன்மண்டபம் இடிக்கும் பணி, ஓரிரு நாட்களாக நடக்கிறது. தற்போது வரை, 15 சதவீத திருப்பணி முடிந்துள்ளதாக, அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement