Advertisement

செய்திகள் சில வரிகளில். ..

தான்தோன்றியம்மன் கோவிலில்
13ல் குண்டம் விழா பூச்சாட்டுதல்

கோபி அருகே மொடச்சூரில், பிரசித்தி பெற்ற தான்தோன்றியம்மன் கோவில் உள்ளது. இங்கு நடப்பாண்டு குண்டம் தேர்த்திருவிழா, வரும், 13ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. 25ல் சந்தனக்காப்பு அலங்காரம், 27ல் மாவிளக்கு பூஜை, 28ம் தேதி காலை, 7.40 மணிக்கு தீ மிதி விழா
நடக்கிறது.
29ம் தேதி திருத்தேர் வலம் வருதல், 31ம் தேதி தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. 2024 ஜன., 1ல் மறுபூஜை, 5ல் திருக்கல்யாண உற்சவம் என நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

மாவட்ட உழவர் சந்தைகளில்
67.10 டன் காய்கறி விற்பனை
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி என, 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. வழக்கமாக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில், அதிக எண்ணிக்கையில், மக்கள் சந்தைகளுக்கு வருவது வழக்கமாக உள்ளது.
இதனால் வியாபாரிகளும் காய்கறிகளை அதிகம் கொண்டு வருகின்றனர். விடுமுறை தினமான நேற்று, சம்பத் நகர் உழவர் சந்தைக்கு, 28.17 டன் காய்கறி மற்றும் பழங்கள் வரத்தானது. மொத்தம், 9.55 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. மாவட்டத்தில் ஆறு உழவர் சந்தைகளிலும், 67.10 டன் காய்கறி வரத்தாகி, 23 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

புனித அமல அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்
ஈரோட்டில் ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ள, பழமை வாய்ந்த புனித அமல அன்னை தேவலாயத்தின், நடப்பாண்டு தேர்த்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவை மறைமாவட்ட பொருளாளர் அருண் ஞானப்பிரகாசம் கொடியேற்றினார். முன்னதாக சிறப்பு திருப்பலி நடந்தது.
முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா, 10ம் தேதி துவங்குகிறது. அன்று காலை சிறப்பு திருப்பலியை கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜேசாப் ஸ்தனிஸ் நிறைவேற்றுகிறார். திருப்பலி முடிந்ததும் மாலையில், வேண்டுதல் தேர் எடுக்கப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணிசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, விழிப்புணர்வு வாகன பேரணி நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாற்றுத்திறனுடையோர் நலச்சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைசெல்வி முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில், 5 சதவீதம் வேலைவாய்ப்பு வேண்டும். கர்ப்பிணிக்கு சரியான ஊட்டச்சத்து வழங்கி, ஊனமான குழந்தை பிறப்பை தடுக்க வேண்டும். போலியோ சொட்டு மருந்து கொடுத்து ஊனமில்லா நாட்டை படைப்போம்.
சாலை விதிகளை மதிப்போம். மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவது என வலியுறுத்தி பேரணி நடந்தது.

நடைபயிற்சி திட்டம் துவக்கம்ஈரோட்டில், நடப்போம்; நலம் பெறுவோம் திட்டம், கடந்த மாதம் முதல் நடந்து வரும் நிலையில், மாதத்தின் முதல் ஞாயிறு என்பதால், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நேற்று துவக்கி வைத்தார். இதற்காக கனிராவுத்தர் குளத்தில் இருந்து, 4 கி.மீ., துாரம் வரை நடைபயிற்சிக்காக சாலையை சீரமைத்துள்ளனர். செல்லும் வழியில் இருக்கை, மரங்கள், குடிநீர் வைத்துள்ளனர்.
கடந்த மாதம் திட்டம் துவக்கி வைக்கப்பட்ட நிலையில், அவ்வப்போது வி.ஐ.பி.,க்களை அழைத்து வந்து, நடைபயிற்சி செல்வோரை ஊக்கப்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மாதத்தின் முதல் ஞாயிறு என்பதால், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா காலை, 5:30 மணிக்கு நடைபயிற்சி திட்டத்தை துவக்கி வைத்தார். அதிக எண்ணிக்கையிலானவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள கேட்டு கொண்டார்.

காப்பீடு பதிவு முகாமில் 1,800 பேர் விண்ணப்பம்
ஈரோடு, திருநகர் காலனி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அரசின் மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு பதிவு சேர்க்கை முகாம் நடந்தது.
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்து கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் திருநகர் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்டத்தில் உள்ள, 12 அரசு மருத்துவமனைகள், 48 தனியார் மருத்துவமனைகளில் இக்காப்பீடு திட்டத்தில், 5 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சை பெறலாம். தற்போது நடந்த முகாமில், 1,800க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு கூறினார்.

தம்பதியிடம் கொள்ளை
இரண்டு பேர் கைது
மொடக்குறிச்சி, கந்தசாமிபாளையத்தை சேர்ந்த தம்பதி சுப்பிரமணி, 80, மனைவி கண்ணம்மாள், 55; இருவரும் தோட்டத்து வீட்டில் தனியாக வசிக்கின்றனர். கடந்த, 23ம் தேதி இரவில் முகமூடி அணிந்த மூன்று பேர் வீட்டில் புகுந்தனர்.
தம்பதியை தாக்கி விட்டு, 10 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். கொள்ளை கும்பலை மொடக்குறிச்சி போலீசார் தேடி வந்தனர்.
இது தொடர்பாக திருச்சி, ஜே.ஜே.நகர், ஆனந்தன் மகன் நந்தகுமார், 20; திருப்பூர் மாவட்டம் அவினாசி, கைகாட்டிபுதுார், வெள்ளைகுட்டி மகன் குமார், 45, ஆகியோரை கைது செய்தனர்.
இருவரிடமும் பைக், ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். வழக்கில் தலைமறைவாக உள்ள ஒருவரை, தேடி வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.

பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.,வினர், மூலப்பாளையம் பெட்ரோல் பங்க் அருகில், மாவட்ட தலைவர் வேதானந்தம் தலைமையில் பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மாவட்ட பொது செயலாளர் செந்தில், மாவட்ட துணை தலைவர்கள் குணசேகரன், பாஸ்கர், மாநில பிரசார அணி முன்னாள் தலைவர் சரவணன்
உட்பட பலர் பங்கேற்றனர்.

விபத்தில் தாத்தா பலி: பேரன் படுகாயம்
வெள்ளித்திருப்பூரை அடுத்த கோவிலுாரை சேர்ந்தவர் மாதப்பன், 65; கூலி தொழிலாளி. இவரின் பேரன் கருப்புசாமி, 18; இருவரும் நேற்று காலை, இறைச்சி எடுப்பதற்காக டூவீலரில் எண்ணமங்கலம் சென்றனர்.
பைக்கை பேரன் ஓட்டினார். அம்மன் ஊத்துப்பள்ளம் என்ற இடத்தில், முன்னால் சென்ற சரக்கு வாகனத்தில் பைக் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட மாதப்பன் சம்பவ இடத்தில் பலியானார். பலத்த காயமடைந்த கருப்புசாமி, அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு
விளையாட்டு போட்டிகள்
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஈரோட்டில் மாற்றுத்திறன் மாணவ, மாணவியருக்கான
சக்கர நாற்காலி, ஓட்டம், வட்டு எறிதல், நின்று நீளம் தாண்டுதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டி நேற்று நடந்தது. கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார்.
அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்று, கோப்பை,பதக்கங்களை வழங்கி கலெக்டர்
பேசினார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைசெல்வி உட்பட பலர்
பங்கேற்றனர்.

கொங்கு பள்ளி ஆண்டு விழா
பெருந்துறை, கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி, 42வது ஆண்டு விழா நடந்தது. பள்ளித்தலைவர் யசோதரன் தலைமை வகித்தார். பள்ளி இணை செயலாளர் முத்து ராமலிங்கம் வரவேற்றார்.
பள்ளி துணைத்தலைவர் குமாரசாமி, பொருளாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். முதல்வர் முத்துசுப்பிரமணியம் ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு அழைப்பாளராக பட்டிமன்ற பேச்சாளரும் எழுத்தாளருமான, கவிதா ஜவஹர் பரிசு வழங்கி பேசினார். தொடர்ந்து மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.
நிறைவில் பள்ளி தாளாளர் சென்னியப்பன் நன்றி கூறினார். பள்ளி நிர்வாக குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.


மொபைலை பறித்ததால் மாணவி விபரீத முடிவு
அந்தியூர் அருகே பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் தங்கராசு, 42; இவரின் மகள் பிரதீபா, 18; ஒத்தக்
குதிரையில் தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு ஈ.சி.இ., படித்து வந்தார். பிரதீபா மொபைல்போனில் அதிகம் விளையாடியதை, தாய் சித்ரா கண்டித்ததுடன், மொபைல்போனை பறித்துக் கொண்டு தோட்டத்துக்கு சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்த மாணவி, களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி இறந்தார்.

ரூ.4.4௦ லட்சத்துக்கு வாழை விற்பனை
அந்தியூர் அருகே புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில், வாழைத்தார் ஏலம் நடந்தது. கதளி கிலோ, 28 ரூபாய்; நேந்திரம், 20 ரூபாய்; பூவன் தார், 320 ரூபாய்; செவ்வாழை, 600 ரூபாய்; ரஸ்தாளி, 540 ரூபாய்; மொந்தன், 150 ரூபாய்க்கும், விலை போனது. மொத்தம், 3,௦௦௦ வாழைத்தார் வரத்தாகி, 4.40 லட்சம் ரூபாய்க்கு விற்றது.


ரயில்வே பாலத்தில் தடுப்பு கம்பி மாற்றம்
ஈரோடு, பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலை வழியாக வெண்டிப்பாளையம் சென்று கரூர் சாலையையும், வெண்டிபாளையம் பாலத்தை கடந்து நாமக்கல் மாவட்டத்துக்கும் செல்லலாம். இவ்விடத்தில் கரூர் சாலையில் ரயில்வே பாலம் உள்ளது.
பாலத்தில் ஒரு நேரத்தில் ஒரு கார் அல்லது குறைந்த அளவு பாரம் ஏற்றிய லாரி மட்டுமே செல்ல முடியும்.
அதற்கேற்ப நுழைவு பாலத்தின் இரு புறமும் குறைந்த உயரத்திலான லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மட்டும் செல்லும்படி, 'ப' வடிவில் இரும்பு கம்பி தடுப்பு வைத்துள்ளனர். ஆனாலும், அதிக பாரத்துடன் வரும் வாகனங்கள், கம்பியை பெயர்த்து விட்டு செல்கின்றன.இதில் கரூர் சாலையில் இருந்து ஈரோடு நோக்கி நுழையும் பகுதி தடுப்பு கம்பி உடைக்கப்பட்டிருந்தது. நெடுஞ்சாலை துறையினர் நேற்று புது கம்பம் அமைத்து பாதுகாப்பாக 'நட்'கள் வைத்து உறுதி செய்தனர்.
இதனால் அதிக பாரம், அதிக உயரம் ஏற்றி வரும் கனரக வாகனங்கள், இனி நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜே.இ.இ., முதன்மை தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி
உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.ஐ.டி., இளநிலை பட்டப்படிப்பில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ.,) தேர்ச்சி பெற வேண்டும். மெயின், அட்வான்ஸ் தேர்வு என இருபிரிவுகளாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.
வரும், 2024ம் ஆண்டுக்கான மெயின் தேர்வு ஜன., 24 முதல் பிப்., 1 வரை நடக்கவுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நவ., 1ல் துவங்கியது; 30 ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விண்ணப்பிப்பவர் வசதிக்காக அவகாசத்தை நான்கு நாட்கள் நீட்டித்து, தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இன்றுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவு பெறுகிறது.
ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் வரும், 6 முதல், 8ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.

பா.ஜ.,நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தாராபுரம், உடுமலை ரோட்டில் உள்ள அரங்கில் கோட்ட பொறுப்பாளர் பாலகுமார் தலைமையில் பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி பேசுகையில்,''பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்பட அனைவரும், தேர்தல் பணிக்காக எதிர்வரும், 100 நாட்கள் கடுமையான உழைப்பை தர வேண்டும்,'' என்றார்.
அரசியல், சமுதாய, அமைப்பு ரீதியான பணிகள் மற்றும் சமூக வலைதளம் உள்பட துறை ரீதியாக, பொறுப்பாளர்களுக்கான வேலைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மாநில நிர்வாகி மோகனப்பிரியா, மாவட்ட நிர்வாகிகள் வடுகநாதன், விஜயகுமார், நகர தலைவர் சதீஷ் உள்பட காங்கேயம், மடத்துக்குளம், உடுமலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திரளானோர் பங்கேற்றனர்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement