Advertisement

சாலை வசதி கேட்டு மக்கள் மறியல் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம்: ஆசனுார் அருகே, தார்ச்சாலை அமைக்க வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், 300க்கும் மேற்பட்ட மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி தாலுகா ஆசனுார் ஊராட்சியில் கோட்டாடை, குழியாடா, தேவர்நத்தம், கெத்தேசால் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கி, பணிகள் ஆரம்பித்ததும் வனத்துறையினர் தடை விதித்ததால் பொதுமக்கள் ஆவேசமடைந்தனர்.

மேலும் தொலை தொடர்பு சேவை, அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துதல், சமுதாயக்கூடம் அமைத்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 300க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள், பள்ளி மாணவ மாணவிகளுடன் சேர்ந்து, கொள்ளேகால் செல்லும் வழி மற்றும் மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை, 11:00 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் தமிழகம்-கர்நாடகா இடையே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தாளவாடி தாசில்தார் ரவிசங்கர், வனத்துறை அதிகாரிகள், போலீசார் வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஈரோடு கலெக்டர் உறுதி கொடுத்தால் தான் கலைந்து செல்வோம் என கூறி,
மறியலை மக்கள் தொடர்ந்தனர்.
அப்போது பொது மக்கள் சிலரை போலீசார் வேனில் ஏற்றினர். கூடியிருந்தவர்கள் வாகனத்தை சூழ்ந்து கொண்டனர்.
இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்பு, மறியலில் ஈடுபட்டவர்களிடம் கோபி ஆர்.டி.ஓ., திவ்ய பிரியதர்ஷினி, வீடியோ காலில் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து, 2:00 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால், 4 மணி நேரமாக தமிழகம் - கர்நாடகா எல்லையில், வாகனங்கள் மூன்று புறமும் 1 கி.மீ., தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. பண்ணாரியிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் அவதிக்குள்ளாகினர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement