Advertisement

ஆர்.டி.ஓ., விசாரணைக்கு வந்திருந்த மக்கள்: கோபி எம்.எல்.ஏ., காரை முற்றுகையிட்டு மறியல்

கோபி: ஆர்.டி.ஓ., விசாரணைக்கு வந்திருந்த மக்கள், கோபி எம்.எல்.ஏ., காரை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே கடுக்காம்பாளையத்தில் பழனியம்மாள், 52, என்பவரின் வீட்டில் கடந்த நவ.,21ல், இரு கோழிகளை திருடியதாக மைனர் வயது கல்லுாரி மாணவர் உட்பட இருவரை, பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து சிறுவலுார் போலீசில் ஒப்படைத்தனர். இந்நிலையில் தங்களை ஒரு கும்பல் தாக்கியதாக கூறி, அந்த மாணவர் அளித்த புகார்படி, அடையாளம் தெரியாத, 20 பேரிடம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சிறுவலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து கோபி ஆர்.டி.ஓ., திவ்ய பிரியதர்ஷினி, டி.எஸ்.பி., தங்கவேல் ஆகியோர் கடந்த நவ., 28ல், இரு தரப்பினரிடம் விசாரணை செய்தனர். இந்நிலையில், இரண்டாம் கட்ட ஆர்.டி.ஓ., விசாரணை கோபி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதியம், 2:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையறிந்த கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன், பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் ஆகியோர், ஆர்.டி.ஓ., திவ்ய பிரியதர்ஷினியிடம், அவரது அலுவலக அறையில் நேற்று ஆலோசனை செய்தனர்.
இதையடுத்து கூட்ட அரங்கில் பொதுமக்கள் தரப்பில், 19 பேரிடம் ஆர்.டி.ஓ., திவ்ய பிரியதர்ஷினி, ஈரோடு எஸ்.பி., ஜவகர், கோபி டி.எஸ்.பி., அடங்கிய குழுவினர் விசாரணை செய்தனர். இதில் மூன்று எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்கவில்லை. இதனால் கடுக்காம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், கோபி சப்-கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். பொதுமக்களிடம் விசாரணை முடிந்ததும், ஆர்.டி.ஓ., அறையில் காத்திருந்த மூன்று எம்.எல்.ஏ.,க்களும் வெளியே சென்றனர்.
அப்போது கோபி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செங்கோட்டையன், கம்பர் வீதியில் நின்றிருந்த இனோவா காரில், தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டார். இதையறிந்த பெண்கள், 'தங்களின் பிரச்னைக்கு பதில் கூறி விட்டு செல்லுங்கள்' எனக்கூறி, செங்கோட்டையன் காரை முற்றுகையிட்டு, மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார், பெண்களிடம் பேசி செங்கோட்டையனின் காரை வழியனுப்பி வைத்தனர். மற்ற இரு எம்.எல்.ஏ.,க்களான வெங்கடாசலம், பண்ணாரி ஆகியோர் மாற்று வழியில் சென்றனர். மூன்று எம்.எல்.ஏ.,க்களும் பிரச்னைக்கு எந்த பதிலும் சொல்லாமல் சென்றதால், அங்கு வந்திருந்த மக்கள் கொந்தளித்தனர். இதையடுத்து மற்றொரு தரப்பினர், 11 பேரிடம் கோபி ஆர்.டி.ஓ., திவ்ய பிரியதர்ஷினி விசாரணை செய்தார்.
பொதுமக்கள் தரப்பில் விசாரணையில் பங்கேற்ற, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன சங்க தலைவர் சுபிதளபதி பேசியதாவது:
திருட்டு கும்பலுக்கும், பொதுமக்களுக்கும் இடையே நடந்த சம்பவத்தில், எந்தவிதத்திலும் ஜாதி எண்ணமோ, அதற்கான வன்மமோ கிடையாது. இந்த வழக்கை வாபஸ் பெறுவது குறித்தும், மேல்நடவடிக்கை கைவிடுவது குறித்தும், விசாரணை அதிகாரிகள் இதுவரை எதுவும் கூறவில்லை. இது தனிப்பட்ட சண்டையோ, ஊர் பிரச்னையோ இல்லை. தவறு செய்பவர்களை குற்றவாளியாகத்தான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement