Advertisement

ரயிலில் பொறியாளர் கொலை சி.பி.ஐ., விசாரணைக்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு


மதுரை : ரயிலில் மதுரை பொறியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்தது.

கன்னியாகுமரி மாவட்டம் லட்சுமிபுரம் ஜெயக்குமார் ஜோதி, சுப்பிரமணியன், ஜெயராம் ஜோதி, ரங்கையா, மதன்பிள்ளைதர்மம் ரமேஷ் ஆகியோர் 2008 ஜன.,13ல் நாகர்கோவில் - திருப்பதி -மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு டிக்கெட்டுகளுடன் திருப்பதிக்கு சென்றனர். குஜராத்தில் சாப்ட்வேர் பொறியாளராக பணிபுரிந்த மதுரையைச் சேர்ந்த ராஜேஷ் பிரபு அந்த ரயிலில் பயணித்தார். அவர் ரயிலில் கொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி ரயில்வே போலீசார் கொலை வழக்கு பதிந்தனர். வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது.

பயணிகளுக்கு இடையே தகராறு காரணமாக கொலை நடந்ததாக ஜெயக்குமார் ஜோதி உட்பட 5 பேர் மீது திருநெல்வேலி அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர். அந்நீதிமன்றம் 5 பேரையும் விடுதலை செய்தது. இதை எதிர்த்து தாக்கலான மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜெயக்குமார் ஜோதி உட்பட 5 பேர், 'எங்களுக்கு எதிராக தவறாக வழக்கு பதியப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

தனிநீதிபதி: மனுதாரர்கள் 90 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்துள்ளனர். ஜெயக்குமார் ஜோதி, சுப்பிரமணியன், ரமேஷ், ரங்கையாவிற்கு தலா ரூ.20 லட்சம், ஜெயராம் ஜோதிக்கு ரூ.30 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும். உண்மையைக் கண்டறிய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. வழக்கு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி., போலீசார் மதுரை சி.பி.ஐ.,-எஸ்.பி.,யிடம் ஒப்படைக்க வேண்டும்.

அவர் விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும். வழக்கின் முன்னேற்றம் குறித்து 6 மாதங்களில் சி.பி.ஐ., இந்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி., மேல்முறையீடு செய்தனர்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் அமர்வு தனி நீதிபதியின் உத்தரவிற்கு 4 வாரங்கள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement