Advertisement

டாக்டர்களை நியமிக்காததால் நோயாளிகள் கடும் பாதிப்பு: ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடரும் அவலம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தரமாக டாக்டர்கள் நியமிப்பதில் இழுபறி நீடிப்பதால், தொடர் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் முழுமையான சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் மூலம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 2012 அக்.,14ம் தேதி துவக்கப்பட்டது. நகராட்சி வளாகத்திற்குள் குறுகிய இடத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது. சிறுவங்கூரில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை புதிதாக நிறுவப்பட்டு செயல்பட துவங்கியது.

இதனையடுத்து கச்சிராயபாளையம் சாலையில் உள்ள பழைய மருத்துவமனை வளாகத்திற்கு நகர ஆரம்ப சுகாதார நிலையம் மாற்றப்பட்டது.

இதனால் சிறுவங்கூருக்கு செல்வதற்கு சிரமப்பட்டு, தற்போது பழைய மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் நகர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நோயாளிகள் அதிகளவில் வருகின்றனர். சுகாதார நிலையத்திற்கு நிரந்தரமாக டாக்டர்கள் யாரும் நியமிக்கப்படாமலேயே கடந்த ஓராண்டுக்கு மேலாக இழுபறி நீடித்து வருகிறது.

பயிற்சி டாக்டர்கள் மட்டுமே மாறி மாறி சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். நிரந்தரமாக டாக்டர் யாரும் நியமிக்கப்படாததால், தொடர் சிகிச்சை பெறும் நோயாளிகள் மாறி மாறி பணி புரிந்து வரும் வெவ்வேறு டாக்டர்களிடம் தங்களின் குறைபாடுகளை தெரிவிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

அத்துடன் சுகாதார நிலையத்திற்கு தேவையான கட்டடங்கள் முழுமையாக வழங்கப்படாததால், போதிய இடவசதி இல்லாத நிலை நீடித்து வருகிறது.

இதனால் அங்கு கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை செய்து தொடர் சிகிச்சை அளிக்க முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. அதேபோல் இங்குள்ள கழிப்பறைக்கு தேவையான தண்ணீர் வசதி இல்லாததால் டாக்டர்கள், பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் வாரம் ஒருமுறை இந்த சுகாதார நிலைய ஊழியர்கள் மூலமாக மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்த நாட்களில் இங்குள்ள மருத்துவ உபகரணங்களையும் பணியாளர்கள் எடுத்து செல்கின்றனர்.

அப்போது, இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய பரிசோதனை செய்ய முடியாமலும், போதிய சிகிச்சை அளிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

நோயாளிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், சுகாதார மையத்திற்கு வழங்கப்படும் மருந்துகளின் அளவு குறைவாகவே உள்ளதாக தெரிகிறது. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு போதிய மருந்துகள் வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

எனவே கள்ளக்குறிச்சி நகர ஆரம்ப சுகாதார மையத்திற்கு டாக்டர்களை நியமனம் செய்து, பணியாளர்கள் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்டி, கூடுதலாக மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement