Advertisement

டாஸ்மாக் கடை அகற்ற வலியுறுத்தி லா.கூடலுாரில் பெண்கள் முற்றுகை எம்.எல்.ஏ., முன்னிலையில் சீல்

ADVERTISEMENT


ரிஷிவந்தியம்: லா.கூடலுார் கிராமத்தில் டாஸ்மாக் கடையினை அகற்ற வலியுறுத்தி பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் செய்த நிலையில், எம்.எல்.ஏ., முன்னிலையில் கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலுார் கிராமத்தில் மெயின்ரோட்டினை ஒட்டியவாறு அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. மதுபிரியர்கள் சிலர் போதையில் அவ்வழியாக செல்பவர்களிடம் தகராறில் ஈடுபடுவதாலும், சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு செல்வதாலும் பொதுமக்கள், பெண்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். அவ்வப்போது சாலை விபத்துகளும் ஏற்பட்டது. இதையொட்டி, லா.கூடலுாரில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையினை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், லா.கூடலுார் கிராமத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை 11.50 மணியளவில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருக்கோவிலுார் டி.எஸ்.பி., மனோஜ்குமார், இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், தனசேகர், ஏழுமலை மற்றும் வருவாய் துறையினர் முற்றுகையில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்படவில்லை. மேலும், பெண்கள் சிலர் டாஸ்மாக் கடையின் மீது கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் சம்பவ இடத்துக்கு சென்று, டாஸ்மாக் கடையினை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். ஆனால், பெண்கள் கலைந்து செல்லாமல் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், மதியம் 1.10 மணியளவில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னிலையில் அரசு டாஸ்மாக் கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக டாஸ்மாக் கடைக்கு முன் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement