Advertisement

பழமை ஆவணங்கள் கணினிமயமாக்கப்படுவது எப்போது பதிவு வைப்பறை, ஆவண காப்பகங்களை மேம்படுத்த வேண்டும்



மதுரை : மதுரை மாவட்ட பதிவு வைப்பறை, ஆவண காப்பகங்களை 'கணினி' மயமாக்கி ஆவணங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட பதிவு வைப்பறை உள்ளது. சென்னை, கடலுார், தஞ்சாவூர், மதுரை, திருச்சி, சேலம், கோவையில் மாவட்ட ஆவண காப்பகமும் உள்ளது.

மாவட்டங்களில் உள்ள பதிவு வைப்பறையில் வருவாய், ஊரக வளர்ச்சித்துறை, பிற்படுத்தப்பட்டோர், கலால், வழங்கல் அலுவலகம், சத்துணவு, சீர்மரபினர் உட்பட சிலதுறைகளின் பழமையான ஆவணங்கள் பாதுகாக்கப்படுகிறது. வருவாய்த்துறையில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்கள்கூட பராமரிக்கப்படுகின்றன.

1864 முதல் 1898 வரையான நிலங்கள் தொடர்பான பழைய செட்டில்மென்ட் ரிஜிஸ்டர் (ஓ.எஸ்.ஆர்.,) 1901 முதல் 1938 வரையான ரீ செட்டில்மென்ட் ரிஜிஸ்டர் (ஆர்.எஸ்.ஆர்.,) 1950 ன் சர்வே நில பதிவேடு (எஸ்.எல்.ஆர்.,) மற்றும் 1979க்கான ஏ' ரிஜிஸ்டர் (ஏ பதிவேடு), 1984க்கான யு.டி.ஆர்., உட்பட முக்கிய ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு பாதுகாப்பில் உள்ளன.

ஆவண காப்பகம்



ஒவ்வொரு அரசு துறையிலும் 30 ஆண்டுகள் ஆவணங்களை பராமரிக்கின்றனர். அதன்பின் முக்கிய பிரச்னை தொடர்பான ஆவணங்கள், வழக்குகளில் தொடர்புள்ளவை தவிர சாதாரண ஆவணங்களை அழித்து விடுகின்றனர். மதுரையில் உள்ள ஆவண காப்பகத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள அரசு துறைகளின் முக்கிய ஆவணங்களை கேட்டு வாங்கி பராமரித்து வருகின்றனர். இங்கு 1897 முதல் உள்ள ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

இவையெல்லாம் காகிதங்களாக உள்ளதால் அவற்றை பாதுகாக்க பெரும் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.இவற்றை கணினிமயமாக்குவது காலத்தின் கட்டாயம். இதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். பொதுமக்களில் பலர் தங்களுக்கான, கிராமம் உட்பட பொது விஷயங்களுக்காக நிலம் தொடர்பான ஆவணங்களை கேட்டு மாவட்ட பதிவு வைப்பறைகளுக்கு வருகின்றனர். சிரமப்பட்டு பராமரிக்கும் ஆவணங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபாடு உள்ளது. இவற்றை முறைப்படுத்தினால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும்.

கணினிமயமாக்க நடவடிக்கை



2019 ல் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் ஒருவர் ஒருதகவல் கேட்டு மனு செய்துள்ளார். அப்போதைய தகவல் ஆணையர் முத்துராஜ், பொதுமக்கள் தங்களுக்கான ஆவணங்களை பெறுவதில் சிரமப்படுகின்றனர். எனவே ஆவணங்களை கணினிமயமாக்க வேண்டும். அரசின் வருவாய்த்துறை கொள்கைக் குறிப்பேட்டிலும் ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, இ சேவை மூலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை வரவில்லை. எனவே 2 மாத காலத்திற்குள் கணினிமயமாக்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, இசேவை மூலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும், என உத்தரவிட்டார். ஆனால் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆவண காப்பக துறையில் இப்போதுதான் சென்னை அலுவலகத்தில் கணினிமயமாக்க டெண்டர் விடும் பணிகளே நடக்கிறது.

கணினிமயமாக்க படாததால் ஒவ்வொரு மாவட்டத்திலும் விலைமதிப்பில்லாத ஆவணங்கள் பராமரிப்பின்றி பாழ்படும் நிலையில் உள்ளன. எனவே தமிழக அரசு இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

ஏன் கணினிமயமாக்கல் அவசியம்

தமிழக அரசின் செய்தித்துறை இயக்குனராக இருந்த ஜெயசீலன், அரசின் 'விர்ச்சுவல் அகாடமி' என்ற பிரிவையும் கூடுதலாக கவனித்தார். அப்போது பெரியாறு அணை தொடர்பான ஆவணங்களை 'கணினிமயமாக்க' முயற்சி மேற்கொண்டார். அதற்கான குழு மதுரை வந்தபோது, பராமரிப்பில்லாத பொதுப்பணித்துறை ஆவண காப்பக அறையின் கூரை விழுந்து ஆவணங்கள் மழைநீரில் நனைந்து பாதிப்புக்குள்ளாயின. அதனால் நுாறாண்டுகளை கடந்து நிற்கும் அணையின் வரலாற்று ஆவணங்கள் மட்டுமின்றி, பாசன பகுதி கால்வாய்கள், நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் பலவும் சேதமானது. இதனால் ஆவணங்கள் கணினிமயமாக்கலின் அவசியம் எழுகிறது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement