Advertisement

57 ஸ்பாஞ்ச் பூங்காக்கள் வடிகாலுடன் இணைப்பு புது முயற்சி! பருவமழையை தேக்கி நிலத்தடி நீர் உயர நடவடிக்கை

ADVERTISEMENT
சென்னையில் நிலத்தடி நீரை உயர்த்தும்விதமாக, மழைக்காலத்தில் திறந்தவெளி இடங்கள், பூங்காக்களில் தேங்கும் மழைநீரை இரண்டு நாட்கள் வரை அகற்றாமல் இருக்க, மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. அத்துடன் 57 இடங்களில் அமைக்கப்பட்டு வரும், 'ஸ்பாஞ்ச்' பூங்காக்களை வடிகாலுடன் இணைத்து வீணாகும் பருவமழைநீரை சேமிக்கவும், புது முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சென்னையில் தொழில் வளர்ச்சி, மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப சாலை, கட்டடங்களின் தேவையும் பெருகி வருகிறது.

வீட்டு வளாகம் உட்பட பார்க்கும் இடமெல்லாம், கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதனால், மழை பெய்தால் பூமிக்குள் தண்ணீர் இறங்க வழியில்லாத நிலை உள்ளது.

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தாலும், கட்டட உரிமையாளர்கள் அவற்றை முறையாக கையாளுவதில் அக்கறை காட்டுவதில்லை.

இதனால், பூமிக்குள் தேவையான அளவு நீர் செல்வதில்லை. மழைநீர் பூமிக்குள் செல்லும் வகையில் குளங்கள், மழைநீர் வடிகால்களில் உறைகிணறு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை, மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.

ஆனால், பருவ காலங்களில் பெய்யும் பெருமளவு மழைநீர் கடலுக்குள் சென்று விடுகிறது. இதனால், கோடைக்காலத்தில் நிலத்தடி நீர் பரவலாக கிடைப்பதில்லை.

பல இடங்களில், 20 அடிக்கு மேல் தோண்டும்பட்சத்தில், உப்பு நீர் தான் மக்களுக்கு கிடைக்கிறது.

இதனால், பரவலாக அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், 57 இடங்களில் 'ஸ்பாஞ்ச் பார்க்' என்ற, நிலத்தடி நீர் உறிஞ்சும் குளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இடத்தைப் பொறுத்து, 2,000 முதல் 5,000 சதுர அடி பரப்பும், 10 முதல் 15 அடி ஆழம் எடுத்து நீர்த்தேக்கம் அமைக்கப்படுவதுடன், சுற்றி கருங்கல் கட்டமைப்பும், மைய பகுதியில் 4 அடி ஆழத்தில் 3 முதல் 5 எண்ணிக்கையில் மழைநீர் உறிஞ்சும் தன்மையுடைய கட்டமைப்பும் அமைக்கப்படுகிறது.

பல்வேறு இடங்களில், 80 சதவீதத்திற்கும் மேல் பணிகள் முடிந்த நிலையில், இந்த பருவமழைக்கு மழைநீரை தேக்கும் முயற்சியில், மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:

மாநகராட்சியின் 57 பூங்காக்களில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையிலான, 'ஸ்பாஞ்ச் பார்க்' அமைக்கப்பட்டு வருகிறது.

ஒரு பகுதியில் பெய்யும் மழையால் தேங்கும் நீர், வடிகால் வாயிலாக, அருகில் உள்ள ஸ்பாஞ்ச் பார்க்கிற்கு செல்லும். அது நிரம்பினால், வடிகால் வாயிலாக மற்றொரு ஸ்பாஞ்ச் பார்க்கிற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதுபோல், 57 ஸ்பாஞ்ச் பார்க்கிற்கும் இணைப்புகள் உள்ளதால், அனைத்தும் நிரம்பிய பின்னரே, உபரி நீர் கடலுக்குச் செல்லும்.

அத்துடன், தற்போது பெய்யும் மழைக்கு திறந்தவெளி நிலங்கள், பூங்காக்களில் தேங்கும் நீரை, இரண்டு நாட்கள் வரை அகற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதாவது, அந்த மழைநீர் பூமிக்குள் இறங்குவதற்கு அவகாசம் வழங்கும் வகையில், மக்களுக்கு பாதிப்பில்லாத பகுதிகளில் தேங்கும் நீர், உடனடியாக அகற்றப்படாது.

அசுத்தம் மற்றும் கொசு உற்பத்தியாகும் சூழல் இருக்கும்பட்சத்தில் மட்டுமே அந்த தண்ணீர் அகற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -



வாசகர் கருத்து (1)

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    நல்லதொரு முயற்சி. ஆனால் சரியான பராமரிப்பும் தேவை. இல்லையெனில் கொசுப் பண்ணைகள் உருவாகி விடும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement