பள்ளி மாணவர்கள் மோதல் எச்சரித்து அனுப்பிய போலீசார்
புழல், புழல் அடுத்த சூரப்பட்டு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், அம்பத்துாரைச் சேர்ந்த, 17 வயது மாணவர்கள், பிளஸ் 2 படித்து வருகின்றனர். கடந்த 29ம் தேதி மாலை, பள்ளி நேரம் முடிந்த பின், வெளியே வந்தபோது, இரு மாணவர்களிடையே வாக்குவாதம் முற்றி மோதலானது.
அதில், ஒரு மாணவர் மற்றவரை கைகளால் சரமாரியாக தாக்கியதால், அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து, பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர், புழல் போலீசில் புகார் செய்தனர்.
இது குறித்து, நேற்று முன்தினம், புழல் போலீசார் விசாரித்தனர். அப்போது, 'வாட்ஸாப்' குழுவில், தவறான தகவலை வெளியிட்ட மாணவரிடம், மற்றொரு மாணவர் 'அதை நீக்கி மன்னிப்பு கோர வேண்டும்' என கூறியிருக்கிறார்.
இதனால் ஏற்பட்ட மோதலில், தவறான தகவல் பதிவிட்ட மாணவர் தாக்கப்பட்டது தெரியவந்தது. போலீசார், அவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற காரணத்தால், பள்ளியில் மொபைல் போனை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்து, அவர்களை பெற்றோருடன் அனுப்பினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!