சென்னை மாநகராட்சியின் மொத்தமுள்ள 200 வார்டுகளில், 170க்கும் மேற்பட்ட வார்டுகளில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கவுன்சிலர்களாக உள்ளனர். இதில், 100க்கும் மேல் பெண் கவுன்சிலர்கள் உள்ளனர்.
பெண் கவுன்சிலர்களில் பலர் நேரடியாக செயல்படுவதில்லை. மாறாக, அவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஆண்களை நிழல் கவுன்சிலர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் நடைபெறும் பல பணிகளுக்கு, கவுன்சிலர் பலர், 10 முதல் 20 சதவீதம் கமிஷன் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, சாலை அமைக்கும் பணி, அடுக்குமாடி கட்டுமான பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
அத்துடன், சென்னை மாநகராட்சியின் இலவச கழிப்பறைகளையும் ஆக்கிரமித்து கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
பல்வேறு வகையில், மாநகராட்சி அதிகாரிகளும், கவுன்சிலர்களும் முறைகேடு மற்றும் லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது.
இவற்றை கண்காணிக்க, மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், லஞ்ச ஒழிப்புதுறை செயல்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை இந்த பிரிவு, யார் மீதும் எந்த புகார் அறிக்கையும் அளிக்கவில்லை; நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஜெயலலிதா முதல்வராகவும், சைதை துரைசாமி மேயராக இருந்தப்போது, கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் செய்யும் முறைகேடுகள் குறித்து உடனடியாக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மட்டுமின்றி, அந்தந்த காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக, எஸ்.பி.சி.ஐ.டி., - ஐ.எஸ்., போலீசாரும், உரிய ஆவணங்களுடன் அரசுக்கு அறிக்கை அளித்தனர்.
இதன் காரணமாக, பல கவுன்சிலர்களை அழைத்து அப்போதைய மேயர் மற்றும் அ.தி.மு.க., தலைமை கண்டித்தது.
தற்போது, ஆட்சி மாற்றத்திற்கு பின், கவுன்சிலர்கள் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளாகியும், எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு துறை யார் மீதும், எவ்வித அறிக்கையும் வேண்டாம் என, அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.
இதனால், மாநகராட்சியில் நடைபெறும் வழக்கமான நிகழ்வுகளை மட்டுமே, நாங்கள் தொகுத்து அறிக்கை அளித்து வருகிறோம்.
சில நேரங்களில், நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வரும் செய்தியை விசாரிக்க அறிவுறுத்தப்படும். மற்றபடி, கவுன்சிலர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை தரவும் முடிவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
'மாஜி' கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுசென்னை மாநகராட்சி மேயராக சைதை துரைசாமி பொறுப்பு வகித்த போது, சென்னையில் கட்டுமான பணிகளுக்கான வரைப்படத்திற்கு அனுமதி அளிப்பதற்கு, 'க்ரீன் சேனல்' துவக்கப்பட்டது. இதன் வாயிலாக, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக அனுமதி அளிக்கப்பட்டது. அவ்வாறு அனுமதி தாமதமானால், பொதுமக்கள் நேரடியாக மேயரிடம் புகார் அளிக்கும் வசதியும் இருந்தது.மேலும், 400 சதுர அடிக்கு கீழ் உள்ள கட்டுமான பணிகளுக்கும் வரைபடம் அளிக்கப்பட்டு, அவர்களுக்கு வங்கியில் கடன் பெற வசதி ஏற்படுத்தப்பட்டது.அத்துடன், சாலை வெட்டு பணிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் அனுமதி அளித்தல், சமுதாய நலக்கூடங்கள் இலவசம் உள்ளிட்ட பல்வேறு வகையில் லஞ்சம் பெறுவதற்கான கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததாக முன்னாள் கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.ஆனால், தற்போது, சென்னை மாநகராட்சி எல்லைக்குள், கட்டுமான பணிகளுக்கான வரைப்பட அனுமதி, குடிநீர் இணைப்புக்கான சாலை வெட்டு அனுமதி, சமுதாய நலக்கூடங்களில் நிகழ்ச்சி நடத்துவது உள்ளிட்டவற்றில் அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாக, அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- நமது நிருபர் -
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!