தேனி நகராட்சியில் அக்.10ல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கும்; ஆலோசனைக் கூட்டத்தில் கமிஷனர் பேச்சு
தேனி : தேனி நகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி அக்.,10ல் துவங்கும் என ஆலோசனைக்கூட்டத்தில் கமிஷனர் கணேசன் தெரிவித்தார்.
தேனி நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றுவது, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், அனுமதி இல்லாத பிளக்ஸ் பேனர்கள் அகற்றுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கமிஷனர் கணேசன் தலைமை வகித்தார். தாசில்தார் சரவணபாபு, டி.எஸ்.பி., பார்த்திபன், மாநில நெடுஞ்சாலை உதவி பொறியாளர் ராமமூர்த்தி, தேசிய நெடுஞ்சாலை இணைப் பொறியாளர் தேவநாதன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வணிகர் சங்கம், வர்த்தக சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.
கமிஷனர் பேசுகையில், நகராட்சி பகுதியில் வணிக நிறுவன குப்பையை பொது இடங்களில் கொட்டுதல், ஆட்டோக்கள் போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்துதல், விபத்து ஏற்படும் வகையில் பிளக்ஸ் வைப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். பொது இடங்களில் போஸ்டர் ஒட்டி நகரின் அழகை கெடுக்கின்றனர். ரோட்டோர கடைகள் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூராக உள்ளன. அவற்றை அகற்ற சென்றால் வாழ்வாதாரம் பாதிக்கின்றது என போர்கொடி துாக்குகின்றனர். பொதுமக்கள் ஒத்துழைத்தால் மாநகராட்சியாக தரம் உயர்த்த இயலும்.
ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு 15 நாட்களுக்குள் அகற்றி கொள்ளாவிடில் அக்.,10 முதல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நகராட்சி ஈடுபடும் என்றார்.
சிபாரிசுக்கு வராதீங்க
டி.எஸ்.பி.,: 'கடைக்காரர்கள் ரோட்டில் இடையூராக விளம்பர பலகைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. போக்குவரத்திற்கு இடையூராக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது யாரும் சிபாரிசுக்கு வராதீர்கள்', என்றார்.
மேம்பால பணி விரைவுபடுத்துங்கள்
நடேசன், தலைவர், வர்த்தக சங்கம், தேனி:எடமால்தெரு, பகவதியம்மன் கோயில் தெரு, சுப்பன்தெருவில் ஆக்கிரமிப்புகள் அதிகம். கடை நடத்துவோர் ரோட்டில் வாகனங்களை நிறுத்துவதால் நடந்து சென்று வர இடையூராக உள்ளது. மதுரை ரோட்டில் பார்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. சில கடைகாரர்கள் தங்கள் கடைக்கு வருபவர்கள் மட்டும் நிறுத்த வேண்டும். பிறர் நிறுத்தக்கூடாது என வாகன ஓட்டிகளிடம் பிரச்னை செய்கின்றனர். மதுரை ரோடு மேம்பால பணி விரைந்து முடிக்க வேண்டும். பெரியகுளம் ரோட்டில் மேம்பால பணியை துரிதப்படுத்த வேண்டும் என்றார்.
மினி பஸ்களால் இடையூறு
பொன் முருகன், மாவட்ட ஓட்டல்கள் சங்கம்: 'பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து மினி பஸ்கள் புறப்பட வேண்டும். மினி பஸ்கள் முக்கிய ரோடுகளில் நிறுத்தி இடையூறு செய்கின்றன. தீபாவளி வர உள்ளதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஒரு மாதத்திற்கு பின் மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
கமிஷனர்: வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் ஆக்கிமிப்புகளை அகற்ற வேண்டும். அதனால் அக்.,10ல் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கும். இடையூறு செய்தால் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம்: 'வீடு, வணிக நிறுவனங்கள் இனி குப்பையை பிரித்து வழங்காதவர்களுக்கும், தடை செய்யப்பட்ட பாலிதீன் விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்' என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!