இன்று போய் நாளை வா... குறைகளை கூறினால் கேலி; ஆதங்கத்தில் அந்தோணியார் நகர் குடியிருப்போர்
திண்டுக்கல், : ஊராட்சி நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மை, அலட்சியம், பொதுமக்களை மதிக்காத போக்கு, ஆளும் கட்சியின் அரசியல் செல்வாக்கு முதலியவற்றை மீறி எங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அடிப்படை வசதியை செய்து தரும்படி முறையிட்டால் கலெக்டர் முதல் அதிகாரிகள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனாக இருப்பதால் மிகவும் நொந்து போய் உள்ளதாக திண்டுக்கல் அந்தோணியார் நகர் குடியிருப்போர் நலசங்கத்தினர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
திண்டுக்கல் மருத்துவ கல்லுாரி ரோட்டிலுள்ள அந்தோணியார் நகர் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் சேசுராஜ், துணைத்தலைவர் லாசர், செயற்குழு உறுப்பினர்கள் சவரியம்மாள், ஜான்பால், சிறுமணி மரியராஜ் கூறியதாவது: அடியனுாத்து மார்க்சிஸ்ட் ஊராட்சி தலைவரால் எங்கள் நகர் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
தெருவில் சாக்கடை வசதியை மருந்துக்கு கூட அமைத்து தராமல் ஊராட்சி நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. வீடுகளின் முன்பு ஓடும் சாக்கடையின் அசுத்தத்தை சகிக்க முடியாமல் பலர் சொந்த வீட்டையே காலி செய்து விட்டு செல்லுமளவு நலத்திட்ட செயல்களின் தோய்வில் எங்கள் பகுதிகளான ஞானநந்தகிரி நகர் வீடுகள் உள்ளன.வார்டு உறுப்பினர்களோடு குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளும் முறையிட்டால் 'இன்று போய் நாளை வா' என அச்சமின்றி, நக்கலான பதிலையே கூறி அனுப்புகின்றனர். ஊராட்சி நிர்வாகமானது சில தனியார்களின் கட்டுப்பாட்டில் கிடப்பதால் அவைகளை நம்பிய பொதுமக்களான எங்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கான நலத்திட்டங்கள் அரங்கேற சாத்தியமில்லை என்ற அவலநிலையே தொடர்கிறது.
எங்கள் பகுதியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் யாகப்பன்பட்டியில் உள்ள 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலைத்தொட்டி மிகவும் அபாயகரமாக நிலையில் சேதமடைந்துள்ளது. இதனால் நிகழப்போகும் பெரும் விபத்துக்களுக்கு
முன் இந்த தொட்டியை சீரமைக்க வேண்டும் என பலமுறை முறையிட்டும் செவிசாய்க்க
மறுக்கின்றனர். 1300 குடும்பங்களுக்கு மேல் இந்த குடிநீர் தொட்டியை நம்பி உள்ளோம். காவிரி நீர்வரத்து தடைபடும்போது ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டால் காவிரி நீர் உங்களுக்கு தேவையா என விதண்டம் பேசுகிறார்கள்.
எங்கள் பகுதிக்குட்பட்ட பெருமாள்கோயில் நகர், காமாட்சி நகர், வசந்தன் நகர், பி.எஸ்.ஆர்.நகர், அன்னை நகர் விஸ்தரிப்பில் ரோடு வசதி என்பது துளியும் இல்லாமல் உள்ளது. 15 ஆண்டுக்க முன்பாக போடப்பட்ட ரோடுகள் இன்றும் தேய்ந்த நிலையில் உள்ளது.
''அந்தோணியார் நகர் குடியிருப்பு பகுதியை கடந்து செல்லும் சிறுமலை நீர்தேக்க ஓடையை மருத்துவ கல்லுாரி அருகே ஓடுபாதைக்கு இடமின்றி அடைத்து விட்டுள்ளனர்.
இதுபற்றிய முறையீடுகளுக்கும் பொறுப்பான பதிலை தர மறுக்கிறது ஊராட்சி நிர்வாகம். பி.டி.ஓ., அரசு அதிகாரிகளை மதிக்காமல் தன்னிச்சையாக ஆளும் கட்சியின் அரசியல் செல்வாக்கில் வளர்ச்சி நிதிகளை சுருட்டும் ஊராட்சி நிர்வாகத்தை எதிர்த்து குரல் கொடுக்க யாருமில்லை , என்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!