பழநி : திண்டுக்கல் மாவட்டத்தில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்,இவைகளை பார்த்தாலே சிறார்கள்,அப்பாவி மக்கள் தெரித்து ஓடுகின்றனர். அவ்வபோது பலரை கடித்து குதறியும் எதையும் கண்டுக்காது உள்ளாட்சி அமைப்புகள் .
மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தெரு நாய்கள் அதிக அளவில் உலா வருகின்றன. தெரு நாய்களால் வாகன ஓட்டுநர்கள் அதிக சிரமம் அடைகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள், முதியவர்கள் திடீரென குறுக்கே வரும் தெரு நாய்களால் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். கூட்டமாக திரியும் தெரு நாய்களால் சாலைகளில் நடந்து செல்லும் நபர்கள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் குழந்தைகள், முதியவர்களை தெரு நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறுகிறது.
தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் கருத்தடை செய்தல் உள்ளிட்ட பணிகள் பல ஆண்டுகளாக முறையாக செய்யப்படாமல் உள்ளது. தெரு நாய்கள் கருத்தடை செய்யப்படாததால் தெரு நாய்களின் எண்ணிக்கையும் பெருகி விட்டது. இதனை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காது வேடிக்கை பார்க்கிறது .
சாக்கடை, குப்பை மேடுகள் , காய்கறி மார்க்கெட், கறிக்கடை, போன்ற பகுதிகளில் உணவுக்காக தெரு நாய்கள் சுற்றித்திரிகிறது. குறிப்பாக மட்டன், சிக்கன் கறி வெட்டி கொடுக்கும் இடங்கள், ஓட்டல் கழிவுகள் கொட்டும் இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் சாலை ஓரங்களில் வீணான உணவுப் பொருட்களை தேடி உணவுக்காக சுற்றுகிறது. இதில் நோய் தொற்று நாய்களும் அடங்கும் . இதனால் மனிதர்களுக்கு நோய் தொற்று உருவாகிறது.
தெரு நாய் கடிகளுக்கு தனியார் மருத்துவமனையில் அதிக விலை கொடுத்து மருந்து வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்படுகிறது. வீடில்லா பிராணிகள் என தெரு நாய்களுக்கு பரிதாபம் பார்க்கும் நபர்களுக்கும் தெரு நாய்களால் தொல்லை ஏற்படுகிறது. தெரு நாய் தொல்லைகள், அதனால் ஏற்படும் நோய் ஆகியவற்றில் இருந்து பொதுமக்களை காக்கும் பொறுப்பு மாவட்ட நிர்வாகத்திற்கு உள்ளது .இதில் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
........
தெருக்களில் நடக்க முடியல
தெரு நாய்கள் நாள்தோறும் யாராவது ஒருவரை தாக்கி வருகிறது. இதில் குறிப்பாக சிறுவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் வெளியூர் சென்று திரும்பி வரும்போது தெருக்களில் நடக்க முடியாத சூழலை தெருநாய்கள் உருவாக்குகிறது. இரவு முழுவதும் தெரு நாய்கள் ஊளை இடுவதால் நகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு துாக்கம் கெடுகிறது. நோய் தொற்று உடன் தெரு நாய்கள், நகர் முழுவதும் சுற்றித் திரிவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது . சிலர் தெரு நாய்களுக்கு உணவு வைத்து பழகி இருப்பதால் அப்பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளது சில நேரங்களில் உணவு வைக்கும் வீட்டில் உறவினர்களையே நாய்கள் தாக்குகிறது. நடைப்பயிற்சி முதியவர்களை தெருநாய்கள் தாக்கும்போது நோய் தொற்றால் உயிருக்கு அபாயம் ஏற்படுகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்புசாமி, நிர்வாகி ,விழுதுகள் அமைப்பு, பழநி.
............
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!