மேகமலை அணைகளின் நீர் மூன்று ஆண்டுகளாக வீணாகிறதே! அதிகாரிகளின் கவனக்குறைவால் மின் உற்பத்தி பாதிப்பு
தேனி மாவட்டம், வண்ணாத்திபாறை அருகே வனப்பகுதிக்குள் சுருளியாறு மின் நிலையம் உள்ளது . இங்கு 141 கனஅடி நீரில் இருந்து 35 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மேகமலையில் ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, அணைகளில் சேகரமாகும் நீரை இரவங்கலாறு அணைக்கு கொண்டு வந்து, அங்கிருந்து 2900 மீட்டர் நீள குழாய் மூலம் நீரை இறக்கி மின் உற்பத்தி நடைபெற்றது.
பைப் லைன் சேதம்
கடந்த 2021 செப்.4 ல் குழாயில் ஏற்பட்ட சேதம் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 2023 ஜனவரியில் ரூ. 10 கோடியில் 220 மீட்டர் நீளத்திற்கு சேதமடைந்த குழாயை சீரமைத்தனர்.
மின்நிலையத்திற்குள் இருந்த சிறு பழுது நீக்கி ஜூலை 17ல் மின் உற்பத்தி துவங்கியது.
இரண்டே நாட்களில் மீண்டும் பழுது ஏற்பட்டு மின்உற்பத்தி தடைபட்டது. 2வது முறையாக மின் உற்பத்தி நிறுத்தி ஒரு மாதம் ஆகிறது.
வடகிழக்கு பருவ மழை காலங்களில் தான் மேகமலை அணைகளில் தண்ணீர் பெருகும். அந்த நீரை பயன்படுத்தி தினமும் சுருளியாறு மின்நிலையத்தில் உற்பத்தி நடைபெறும்.
தண்ணீர் வீணாகும் அவலம்
2021ல் இருந்து 2023 தற்போது வரை மூன்று ஆண்டாக வடகிழக்கு பருவமழை நீர் வீணாகி கடலில் கலந்து வருகிறது. தற்போது பெய்யும் சாரல் மழையால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. ஆனால் பெருகும் நீரை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய முடியவில்லை. இந்த மின் உற்பத்தி இழப்பிற்கு சுருளியாறு மின்நிலைய அதிகாரிகளே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டர், இயந்திரங்கள், நாசில்கள் உள்ளிட்ட உபகரணங்களை தகுதிவாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் பரிசோதித்த பின் உற்பத்தியை துவக்கியிருக்க வேண்டும். ஆனால் அதில் கவனம் செலுத்தாமல், பைப் லைனை சரி செய்தவுடன், மின் உற்பத்தியை துவக்கி அவசரம் காட்டியது அதிகாரிகளின் கவனக்குறைவை காட்டுகிறது.
தற்போது மின்நிலையத்திற்குள் உள்ள இயந்திரங்களை சரி செய்ய குறுகிய கால டெண்டர் விடப்பட்டுள்ளது.
டெண்டர் இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தம் எடுத்தவர் பணிகளை எப்போது துவங்கி முடிப்பார் என தெரியாது. அதற்குள் வடகிழக்கு பருவமழை முடிந்துவிடும். பல லட்சம் யூனிட் மின்உற்பத்தி செய்ய முடியாமல் போய்விடும்.
சுருளியாறு மின்நிலைய பிரச்னை குறித்து விரிவான விசாரணை மின்வாரியம் நடத்தவும்,எதிர்காலத்தில் இதுபோன்ற கவனக்குறைவு ஏற்படாவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!