கோபால்பட்டி : கோபால்பட்டி அருகே கணவாய்பட்டி ஊராட்சி பகுதிகளில் தினமலர் செய்தி எதிரொலியாக சுகாதாரப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
கோபால்பட்டி அருகே கணவாய்பட்டி ஊராட்சியில் 2 வாரங்களுக்கு முன் இருவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளிவந்தது. இருப்பினும் இந்த ஊராட்சியில் உள்ள ஒத்தக்கடை, கணவாய்ப்பட்டி பங்களா, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்பது, குடிநீர் பிடிக்கும் இடத்தில் கழிவுநீர் தேங்கி சுகாதாரமற்ற முறையில் இருப்பது, குப்பை அள்ளாமல் துர்நாற்றத்துடன் நோய் பரவும் அபாயத்துடன் இருப்பது என பல்வேறு சுகாதார பிரச்னைகளால் மக்கள் பாதித்து வந்தனர்.
இதுகுறித்தும் தினமலர் நாளிதழ் உங்கள் ஊராட்சி பகுதியில் கணவாய்ப்பட்டி ஊராட்சியில் உள்ள சுகாதாரப் பிரச்னைகள் குறித்து நேற்று படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக ஊராட்சி தலைவர் நிஷா ராமகிருஷ்ணன், செயலாளர் வெற்றி வேந்தன், சுகாதார ஆய்வாளர்கள் நல்லேந்திரன், முனியப்பன் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர். கணவாய்ப்பட்டி ஊராட்சி ஒத்தக்கடையில் குடிநீர் தொட்டியின் கீழ் தேங்கிய கழிவு நீர் , பங்களா பகுதியில் தேங்கிய கழுவி நீரும் ஊராட்சி துப்புரவு பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. அதேபோல் மேட்டுப்பட்டி பகுதியில் தேக்கமடைந்திருந்த குப்பை அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணிகளும் நடந்தது. தினமலர் செய்தி எதிரொலியால் ஊராட்சி கிராமங்களில் சுகாதாரப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதால் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!