உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் அஞ்சலி
இந்த செய்தியை கேட்க
சின்னமனுார் : வாகன விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்த அரசு அலுவலர் வடிவேல், 43, என்பவர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. சின்னமனுாரில் அவரது உடலுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தேனி மாவட்டம், சின்னமனுார் காந்திநகர் காலனியை சேர்ந்த வடிவேல், தேனி கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றினார். செப்.,23ல் தேனியில் இருந்து சின்னமனுாருக்கு டூ - வீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சீலையம்பட்டி அருகே மாடு குறுக்கே வந்து முட்டியதில் பலத்த காயமடைந்தார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மூளைச்சாவு அடைந்து செப்., 24ல் இறந்தார்.
அவரது உடல் உறுப்புகள் தானம் செய்ய மனைவி பட்டுலட்சுமி சம்மதித்தார். அவரது கண், கல்லீரல், சிறுநீரகம், தோல் ஆகியவை தானம் செய்யப்பட்டன. உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் செப்., 23ல் அறிவித்தார். அதன்படி, நேற்று காலை 11:00 மணிக்கு சின்னமனுாரில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட வடிவேலுவின் உடலுக்கு, அமைச்சர் மா.சுப்ரமணியன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ''உடல் உறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு கலெக்டர், டி.ஆர்.ஓ., - ஆர்.டி.ஓ., என, இவர்களில் ஒருவர் மரியாதை செய்வார்,'' என்றார்.
போலீஸ் மரியாதையில் குழப்பம்
அரசு மரியாதை என்றால், உடல் தகனம் செய்யும் போது, போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்க வேண்டும். இதற்காக தேனி ஆயுதப் படை மைதானத்தில் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.
ஆனால் செப்., 23ல் வெளியான அறிவிப்பிற்கு அரசாணை வெளியாகவில்லை. எனவே போலீஸ் அணிவகுப்பு மரியாதை ரத்து செய்யப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!