விருதுநகர் மாவட்டத்தில் 4 லட்சத்து 55 ஆயிரத்து 284 பேர் விண்ணப்பித்ததில் இதுவரை எத்தனை லட்சம் பேருக்கு தொகை வழங்கப்படுகிறது என்பது மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் லட்சக்கணக்கானவர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தங்களின் ஏழ்மை நிலையை சரியாக ஆய்வு செய்யாமல் மகளிர் தொகை வழங்கவில்லை என தாசில்தார் அலுவலகங்களில் முற்றுகை, வசிக்கும் பகுதிகளில் ரோடு மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் வருவோர் பலருக்கு மகளிர் உரிமை தொகை வரவில்லை. அதே போல் ரூ.800, ரூ.900 என இ.பி.எப்., ஓய்வூதியம் பெறும் தனியார் ஊழியர்களுக்கும் வரவில்லை. ஆனால் அதே பகுதிகளில் சொந்த வீடு வைத்துள்ள, கடை வைத்து வியாபாரம் செய்வோருக்கு உரிமை தொகை வந்துள்ளது. நிலங்கள் வைத்துள்ள விவசாயிகளுக்கு வந்துள்ளது.
வி.ஏ.ஓ., ஊராட்சி செயலாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்களை கொண்டு கள ஆய்வு செய்தும், வருவாய் நிலை அறிவதில் கோட்டை விட்டு விட்டதாக மக்கள் கூறுகின்றனர். பல இடங்களில் பெயருக்கு கள ஆய்வு நடந்துள்ளது என்கின்றனர். நேற்று முன்தினம் காரியாபட்டி, விருதுநகர் ஆவுடையாபுரம் பகுதிகளில் மக்கள் உரிமை தொகை வரவில்லை என அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மறு கள ஆய்வு செய்வதாக உறுதி அளித்ததால் மக்கள் சமாதானம் அடைந்துள்ளனர்.
விருதுநகர் சங்கரலிங்கபுரம் அருகே ஓ.கோவில்பட்டியில் மகளிர் தொகை வராதவர்கள் விருதுநகர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க சென்றுள்ளனர். அவர்களை ஊழியர்கள் அலைக்கழிக்க செய்துள்ளனர். இன்னும் சில இசேவை மையங்களில் அநாகரீகமாக பேசுவதும், கடிந்து கொள்வதும் வாடிக்கையாக உள்ளது. தீப்பெட்டி, பட்டாசு தொழிலுக்கு சென்றால் தான் சாப்பாடு என்ற நிலையில் உள்ளவர்கள் இன்னும் நேரில் சென்று முறையீடு குறித்து விண்ணப்பிக்காமலே, தங்களின் நிராகரிக்கப்பட்ட காரணம் குறித்து தெரிந்து கொள்ளவோ இயலாமல் உள்ளனர்.
தமிழக அளவில் விண்ணப்பித்தவர்களில் எத்தனை பேர் மாவட்ட வாரியாக உறுதி செய்யப்பட்டுள்ளனர் என அரசு இன்னும் அறிவிக்காமல் உள்ளது. இன்னும் 5 லட்சம் பேருக்கு கள ஆய்வு நடப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அதில் உங்களுக்கு வரலாம் என வராத மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி வருகின்றனர். மகளிர் உரிமை தொகை இல்லாதவர்களுக்கு கிடைக்காமல், இருப்பவர்களுக்கே கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் மறு கள ஆய்வு செய்து தடுக்க வேண்டும்.
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி, மீனம்பட்டி, விளாம்பட்டி பட்டாசு ஆலையில் வேலை செய்யும் கூலி தொழிலாளர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என நேற்று சிவகாசி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் கூறுகையில், பட்டாசு தொழிலாளர்களான எங்களுக்குவேறு வருமானம் இல்லை வீடும் இல்லை. இதனால் சிரமப்பட்டு வருகின்றோம். ஆனால் வறுமைக் கோட்டுக்கு கீழ் இல்லை என எங்களுக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை. எனவே தாலுகா அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்தும், எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை, என்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!