திருப்புத்துாரில் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 6 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை இல்லாமல் மக்கள் திண்டாடுகின்றனர்.
குடம் ரூ. 15 கொடுத்து தண்ணீர் வாங்கி சமாளிக்கின்றனர். மேல்நிலைத் தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாயில் கசியும் நீரை பிடித்து செல்கின்றனர்.
பேரூராட்சியாகி 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் தினகரி குடிநீர் விநியோகம் என்பது திருப்புத்துாரில் 'கானல் நீராகவே' உள்ளது. பல கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் நிறைவேறியும் பலனில்லை.
தொலைநோக்குடன் நிறைவேற்றப்பட்ட காவிரிக் குடிநீர் திட்ட பராமரிப்பில் குடிநீர் வாரியத்தினர் மற்றும் பேரூராட்சியினர் கவனம் செலுத்தாததால் மக்கள் குடிநீருக்கு அவதிக்குள்ளாவது தொடர்கிறது.
புதுப்பட்டியில் அமைக்கப்பட்ட குடிநீர் திட்ட தரைமட்டத் தொட்டியை ஆய்வு செய்ய குடிநீர் வாரியத்தினர் பல மாதங்களாக வரவில்லை.
அங்கு வெளியேறும் நீரை அளவீடு செய்யும் மீட்டர் பழுதாகி பல மாதங்களாகி விட்டது. குடிநீர் வாரியத்தினர் தினசரி 15 லட்சம் லிட்டர் குடிநீர் தர வேண்டிய நிலையில் 8 லட்சம் லிட்டர் நீரே பேரூராட்சிக்கு சப்ளை செய்வதாக கூறுகின்றனர்.
திருச்சியிலிருந்து திருப்புத்துார் வரை வரும் பெரிய குழாய்கள் வலு இழந்த நிலையில் சிலரால் உடைக்கப்பட்டும் பல இடங்களில் குழாய் விரிசலால்நீர் வீணாக வெளியேறுகிறது. குடிநீர் வாரியத்தினர் போதிய கண்காணிப்பில் ஈடுபடுவதில்லை.
நேற்றைய நிலையில் 4 இடங்களில் குடிநீர் வெளியேறுவதை காண முடிந்தது. அச்சுக்கட்டு பகுதியில் கசியும் நீரை தடுக்க குழாய்கள்வந்து ஒரு மாதமாகியும் மாற்றப்படாமல் நீர் வெளியேறுகிறது. பராமரிப்புப் பணிக்கு நிதிப்பற்றாக்குறை என்று காரணம் கூறப்படுகிறது.
பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன் கூறுகையில், இதற்கான மாற்றுத் திட்டமாக அம்ரூத் 2.1 திட்டம்ரூ.21.76 கோடியில் நிறைவேற்றப்படுகிறது.
இத்திட்டத்தில் நகர் முழுவதும் 7 கி.மீக்கு புதிய விநியோக குழாய்கள் பதிக்கப்படுகிறது. 3 மேல்நிலைத்தொட்டிகள் கட்டப்பட உள்ளன.
நீர் ஆதாரத்திற்கு 10 இடங்களில் போர்வெல் போடப்பட்டு 2 தரைமட்டத் தொட்டிகள் மூலம் குடிநீர் சேகரிக்கப்பட்டு 18.5 லட்சம் லிட்டர் தினசரி நகர் முழுவதும் விநியோகிக்க மாற்றுத் திட்டமாக இத்திட்டம் உதவும். தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது. ஓராண்டில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் ' என்றார்.
புதிய திட்டம் நிறைவேற ஒரு ஆண்டுக்கும் மேலாகும் என்பதால், விரைவாக திட்டப்பணிகள் நிறைவேறவும், அதுவரை தற்போதைய திட்டப் பராமரிப்பிற்கு நிதி ஒதுக்கீடும், கண்காணிப்பும் தொடர வேண்டியது அவசியமாகும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!