சண்டிகர், ''பஞ்சாபில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த 32 எம்.எல்.ஏ.,க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். எனவே, வரும் லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஓட்டளிக்காதீர்கள்,'' என, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பர்தாப் சிங் பாஜ்வா தெரிவித்தார்.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்திற்கு கடந்த 2022ல் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 117 இடங்களில், 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. காங்., 18 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக உள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான, 'இண்டியா' கூட்டணியில் ஆம் ஆத்மி இடம் பெற்றுள்ள போதிலும், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என, அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, காங்கிரசும் பஞ்சாபில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்தது; இது, இரு கட்சிகளுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ''ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, 32 எம்.எல்.ஏ.,க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். நாங்கள் நினைத்தால், அவர்கள் ஆதரவுடன் ஆட்சியை கலைக்க முடியும்,'' என, பஞ்சாப் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பர்தாப் சிங் பாஜ்வா தெரிவித்தார்.
இதற்கு முதல்வர் பகவந்த் சிங் மான் அளித்த பதில்:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்ப்பேன் என பர்தாப் பாஜ்வா கூறுகிறார். உங்கள் முதல்வர் கனவை காங்கிரஸ் கலைத்துவிட்டது. உங்களுக்கு தைரியம் இருந்தால், கட்சி தலைமையிடம் இது குறித்து பேசுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (2)
ஆட்சிக்கு வந்தால், இப்படித்தான் காங்கிரஸ் கூட்டணி அடித்துக்கொண்டு கும்மாளமிடும். பிறகு கலைந்துபோகும். இது ஜஸ்ட் ட்ரைலர் தான். அதனால் தான் ஒருபோதும் காங்கிரஸ் அணி வெற்றிபெறப்போவதில்லை.
இந்த லட்சணத்தில் I.N.D.I. கூட்டணியாம் கல்லாதோர் கூடி காமுற்றார் போல்