சனாதனத்துக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதியை கண்டித்து, ஹிந்து அமைப்பினர் நேற்று புதுடில்லியில் கண்டன பேரணி நடத்தினர். தமிழ்நாடு இல்லத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்று முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் சமீபத்தில், 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்றார்.
அதில் அவர் பேசும்போது, சனாதனத்தை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டுமென கூறியதால், நாடு முழுதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
வட மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் பலரும், அமைச்சரின் பேச்சுக்கு கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.
விமர்சனம்
பா.ஜ., வின் தலைவர்கள், மூத்த அமைச்சர்களும் உதயநிதியை கண்டித்து கடுமையாக கருத்துக்களை தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியும் இது குறித்து கடுமையாக விமர்சித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த பார்லி., சிறப்புக் கூட்டத்திலும் தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு பா.ஜ.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இரண்டு சபைகளிலும், அவ்வப்போது பரபரப்பு நிலவியது.
இந்நிலையில்தான் நேற்று புதுடில்லியில் உள்ள பாஹடுகஞ்ச் பகுதியில், ஆராம்பாக் உதாசீன் ஆசிரமத்தில் இயங்கி வரும், 'சனாதன தர்ம ரக் ஷா மன்ச்' என்ற அமைப்பின் சார்பில், பல்வேறு ஹிந்து அமைப்புகள் திரண்டன.
காலை, 10:00 மணிக்கு ஏராளமான ஹிந்து அமைப்புகளின் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் புதுடில்லி சரோஜினி நகர் பஸ் டிப்போ அருகில் உள்ள ஷிவ் ஹனுமான் மந்திருக்கு எதிரில் கூடி, போராட்டம் நடத்தினர்.
தடுத்த போலீசார்
அங்கிருந்து, புதிய தமிழ்நாடு இல்லம் நோக்கி புறப்பட்டனர். பேரணியாக புறப்பட்டுச் சென்ற இவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
தமிழ்நாடு இல்லத்தை நெருங்கிய அவர்களை, தடுப்புகள் அமைப்பு போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, அந்த இடத்திலேயே அமைச்சர் உதயநிதி மற்றும் தி.மு.க., தலைவர்களை கண்டித்து, பலரும் ஆவேசமாக பேசினர். பின், தமிழ்நாடு இல்லத்தை நோக்கி செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் அந்த பகுதியில் சில மணி நேரங்களுக்கு பரபரப்பு நிலவியது.
- நமது டில்லி நிருபர் -
இன்னும் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் ஆன்மீகத்தையும் மதத்தையும் வைத்து வாக்கு வாங்கும் நிலையில் தான் பாஜக இருக்கும்.