லதேஹர்-ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் பயணியரை தாக்கி, 76,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவின் சம்பல்பூரில் இருந்து, ஜம்மு - காஷ்மீரின் ஜம்முவை நோக்கி நேற்று முன்தினம் விரைவு ரயில் புறப்பட்டு சென்றது.
இந்த ரயில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் லதேஹர் ரயில் நிலையத்தில் நின்றபோது, 10 - 12 பேர் அடங்கிய கொள்ளை கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பயணியர் பெட்டியில் ஏறியது.
ரயில் புறப்பட்டதும், துப்பாக்கியால் மேல் நோக்கி சுட்டு, அந்த கும்பல், பயணியரை மிரட்டி அவர்களது உடைமைகளை கொள்ளையடித்தது. பயணியர் சிலர், கொள்ளையர்களை தாக்க முயன்றனர்.
கத்தி மற்றும் அரிவாளால் அந்த கும்பல் தாக்கியதில், ஏழு பயணியர் காயம் அடைந்தனர்.
பயணியரின் அலறல் சத்தத்தைக் கேட்டு டால்டோன்கஞ்ச் ரயில் நிலையத்தில் உடனே ரயில் நிறுத்தப்பட்டது.
இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளை கும்பல் தப்பிச் சென்றது.
சம்பவம் நிகழ்ந்த பெட்டியில் விசாரணை நடத்திய ரயில்வே போலீசார், 13 பயணியரிடமிருந்து எட்டு மொபைல் போன் உட்பட, 76,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை, மர்ம கும்பல் கொள்ளைஅடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!