வழிகாட்டி விதிமுறைகள்
தமிழகத்தில் அங்கீகாரமில்லாத மனைகளை வரன்முறைபடுத்தும் திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது.
இதற்கான விண்ணப்ப பதிவு, 2019 நவ., 3ல் முடிந்த நிலையில், 2024 பிப்., 29 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டம் அறிவிக்கப்பட்டபோது, இதற்கான வழிகாட்டி விதிமுறைகள் குடியிருப்புகளுக்கு பொருந்தும் வகையில் வகுக்கப்பட்டன.
ஆனால், பெரும்பாலான இடங்களில் அனைத்து மனைகளும் குடியிருப்பாக இருக்காது. ஒவ்வொரு மனைப் பிரிவிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையில், கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலை பயன்பாட்டு மனைகள் இருக்கும். வீடுகள் அல்லாத இந்த மனைகளுக்கு, வரன்முறை திட்டத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குழப்பம் ஏன்?
இதுகுறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:
வரன்முறை திட்டத்தில், மனைப்பிரிவுகளில் அனைத்து மனைகளும் குடியிருப்பு என்ற வகைபாட்டிலேயே உத்தரவு வழங்கப்படுகிறது.
இதனால், இத்தகைய மனைகளில் கடைகள், அலுவலகங்கள், சிறு, குறு தொழில்கள் செய்து வருவோருக்கு சிக்கல் ஏற்படுகிறது.
உரிமையாளர்கள் வீட்டு மனைகளாக அனுமதி பெற்று, மீண்டும் விண்ணப்பித்து நிலத்தின் வகைபாட்டை மாற்ற வேண்டி உள்ளது.
வரன்முறை நிலையிலேயே, இந்த விஷயத்தில் நிலவும் குழப்பத்தை தீர்க்க, அரசு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பெரும்பாலான மனைப்பிரிவுகள் விவசாய நிலங்களில் அமைந்துள்ளதால், வணிக, தொழில் நிறுவனங்களுக்கு தனியாக வகைபாடு மாற்ற வேண்டியது அவசியம். வரன்முறைக்கு விண்ணப்பிக்கும் போது, சம்பந்தப்பட்ட அலுவலர்களை நேரில் அணுகினால், தகுதியுள்ள மனைகளுக்கு சரியான வழிகாட்டுதல்கள் கிடைக்கும். குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு மனைகள் இருந்தால், வகைப்பாடை மாற்றிக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!