சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. இதில், 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்துகின்றனர்.
தற்போது, பெரும்பாலான துறைகளில், 'டிஜிட்டல்' பரிவர்த்தனை நடைமுறையில் உள்ளது.
சென்னை மாநகராட்சியில் நேரடியாக பணம் செலுத்துவது நிறுத்தப்பட்டு, 2011ம் ஆண்டு காசோலை, வரைவோலை, அதன் பின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, 2018ம் ஆண்டு, க்யூ.ஆர்.கோடு வாயிலாக பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் குடிநீர் வாரியத்தில், நேரடி பணம் செலுத்தும் நடைமுறை தொடர்கிறது. தற்போது இரு ஆண்டுகளாக காசோலை, வரைவோலை, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வழியாக பணம் செலுத்தும் நடைமுறை உள்ளது.
கடந்தாண்டு, யு.பி.ஐ., - க்யூ.ஆர்.கோடு மற்றும் பி.ஓ.எஸ்., ஆகியவை வாயிலாக பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
ஆனாலும், வரி வசூலிப்பு மையங்களில் நேரடியாக பணம் செலுத்தும் வகையில், 2020 முதல் 2025ம் ஆண்டுக்காக அட்டை வழங்கப்பட்டிருந்தது. காகித பயன்பாட்டை தடுக்கும் வகையில், கடந்த ஏப்., மாதம் முதல், நுகர்வோருக்கு இந்த அட்டை வழங்குவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் வரி, கட்டணம் வசூலிப்பில், முழு டிஜிட்டல் முறையை கையாள, குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதன்படி வார்டு, மண்டலம் வாரியாக மற்றும் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்ட 216 கவுன்டர்களில், பணம் செலுத்தி ரசீது பெறும் நடைமுறை, வரும் 30ம் தேதியுடன் நிறுத்தப்பட உள்ளது.
அக்., 1ம் தேதி முதல், அதாவது 2023--24 இரண்டாவது அரையாண்டு முதல், வரி மற்றும் கட்டணத்தை நேரடியாக பணமாக செலுத்த முடியாது.
மாறாக காசோலை, வரைவோலை மற்றும் டிஜிட்டல் முறைகளில் மட்டுமே செலுத்த முடியும். இதன் வாயிலாக, பொதுமக்களுக்கு அலைச்சல் குறைவதுடன், இருந்த இடத்திலேயே வரி, கட்டணம் செலுத்த முடியும் என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது, 80 முதல் 85 சதவீதம் பேர் வங்கி பரிவர்த்தனை, 'ஆன்லைன்' வாயிலாக செலுத்துகின்றனர். அக்., 1ம் தேதி முதல், பணப் பரிவர்த்தனை இருக்காது. இதற்காக செயல்படும் 216 கவுன்டர்கள் மூடப்பட உள்ளன.
இதில் பணிபுரியும் பணிமனை மேலாளர்கள், வீடுதோறும் வந்து கட்டணம் வசூலிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டணம் செலுத்துவது தொடர்பான சந்தேகங்களுக்கு, 044--45674567, 1916 அல்லது வார்டு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தற்போதுள்ள, 216 கவுன்டர்களில் காசோலை, வரைவோலை செலுத்தும் வகையில், பெட்டி வைக்கப்பட்டு வருகிறது. அருகில் ஒரு படிவம் இருக்கும். அதில் நுகர்வோர் எண், தொகை, காசோலை மற்றும் வரைவோலை எண், தேதி, வங்கி பெயர், மொபைல் எண், கையொப்பம் உள்ளிட்ட விபரங்களை எழுதி, காசோலை அல்லதுவரைவோலையை அதனுடன் இணைத்து, பெட்டியில் போட வேண்டும்.
காசோலை, வரைவோலையில் தேதி, மூன்று மாதங்களுக்குள் இருக்க வேண்டும். பின் பகுதியில் நுகர்வோர் எண், மொபைல் எண் எழுத வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பெயரில் செலுத்தினால், தனித்தனி காசோலை அல்லது வரைவோலை வழங்க வேண்டும். வங்கியால் வரைவோலை நிராகரிக்கப்பட்டால், வரைவோலை தொகையில் 1 சதவீதம் மற்றும் ஜி.எஸ்.டி., அல்லது 700 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., இதில் எது குறைவோ, அதை அபராதமாக செலுத்த நேரிடும்.
வீடுதோறும் சென்று வரி, கட்டணம் வசூலிக்கும் வகையில், 'பாயின்ட் ஆப் சேல்' என்ற பி.ஓ.எஸ்., கருவி வாங்க, வாரியம் முடிவு செய்துள்ளது. வீட்டிற்கு வரும் பணிமனை மேலாளரிடம் காசோலை, வரைவோலை வழங்குவதுடன், டெபிட், கிரெடிட் கார்டை கொடுத்து, பி.ஓ.எஸ்., கருவி வாயிலாக வரி செலுத்திக் கொள்ளலாம். இதற்கான தகவல், மொபைல் போனில் தெரிவிக்கப்படும். ரசீது தேவைப்படுவோர், குடிநீர் வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- -நமது நிருபர்- -
வாசகர் கருத்து (2)
தத்திகள் ராஜ்ஜியம் நடக்குது இங்கே. போன மாசம் வரைக்கும் சொத்து, குடிநீர் வரிகளை tnurbanepay.gov.in என்ற இணைய தளத்தில் ஒழுங்காக கட்டிக்கொண்டிருந்தேன். இந்த மாதம் அதே வெப் சைட்டிற்குப் போனால் அந்த சைட்டே இல்லையென வந்தது. இப்போ எங்க ஊரின் கார்ப்பரேஷன் வெப்சைட்டிற்குப் போய் கண்டுபிடிச்சு கட்டி முடிச்சேன். கிட்டற்றட்ட ஒரு நாள் வேஸ்ட். தத்திகள் இணைய தளத்தை மாற்றும் போது ஒரு ரீடைரக்ஷன் லிங்க் கூட இல்லாம மாத்துவாங்களா? என்னிட கம்பெனியில் இது மாதுரி செஞ்சிருந்தா இந்த உதவாக்கரை ஐ.டி கும்பலை அன்னிக்கே வேலையை உட்டு தூக்கியிருப்பேன். தண்டத்துக்கு சம்பளம் வாங்கும் தத்திகள் இந்தியாவில் எல்லா அரசு அலுவலகங்களிலும் ஊடுருவிட்டாங்க.
அட கஷ்டகாலமே!