கோயம்பேடு சந்தை சீரமைப்பு திட்டம் அம்போ? சி.எம்.டி.ஏ.,வுக்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு!
சென்னை,கோயம்பேடு சந்தை சீரமைப்பு திட்டம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு, அங்குள்ள அனைத்து வகை வியாபாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
கோயம்பேடு சந்தை வளாகத்தை சீரமைக்க, சி.எம்.டி.ஏ., திட்டமிட்டது. இதற்காக, தனியார் கலந்தாலோசனை நிறுவனம் வாயிலாக, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
கோயம்பேடு சந்தையில் தற்போது பிரதானமாக நடந்து வரும் காய், கனி, மலர் விற்பனையை வேறு இடத்துக்கு மாற்றும் வகையில், தனியார் நிறுவனம் பரிந்துரைகளை வழங்கி உள்ளது.
இது குறித்த தகவல்கள், கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மத்தியில், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கோயம்பேடு, காய், கனி, மலர், உணவு தானிய அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சி.டி.ராஜசேகரன் கூறியதாவது:
கோயம்பேடு சந்தை வளாகம், ஒரு லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது.
இந்த வளாகத்தை சீரமைப்பு என்ற பெயரில் வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்த தகவல் வந்தபோது, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டோம்.
சீரமைப்பு திட்டம் வராது, சந்தை தொடர்ந்து இங்கேயே செயல்படும் என, அவர்கள் உறுதி அளித்தனர்.
இங்குள்ள அனைத்து கடைகளும் வியாபாரிகள் பெயரில் விற்பனை பத்திரம் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்ற இடங்களில் இருப்பது போன்று வாடகை கடைகள் அல்ல. இதை ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பரிந்துரை அடிப்படையில் மாற்ற முயற்சிப்பதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோயம்பேடு பூ சந்தை நிர்வாகக் குழு உறுப்பினர் முத்துராஜ் கூறியதாவது:
கோயம்பேடு சந்தை வளாகம் 1996ல் திறக்கப்பட்டது. அப்போது, இந்த கடைகள், 100 ஆண்டுகள் வரை செயல்படும் என, சி.எம்.டி.ஏ., உறுதி அளித்தது.
தற்போதைய நிலவரப்படி, 26 ஆண்டுகளே கடந்துள்ள நிலையில், இந்த வளாகத்தை மாற்றுவது சரியல்ல. ரியல் எஸ்டேட் நிறுவன பரிந்துரை என வெளியாகும் தகவல்கள், வியாபாரிகள் மத்தியில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துகிறது. இங்குள்ள கடைகள் எங்களுக்கு சொந்தமானது. இதை மாற்ற முயற்சிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கடைகளின் உரிமையாளர்கள் என்ற அடிப்படையில், வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இத்திட்டம் சாத்தியக்கூறு அறிக்கை நிலையிலேயே முடங்கிவிடும் என கூறப்படுகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!