சென்னை மாநகரில் மக்கள் அடர்த்தி, வாகன பெருக்கம், போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால், மாடுகள் சாலையில் திரிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், உரிமையாளர்கள் தங்களுக்கு சொந்தமான இடங்களில், கட்டி வைத்து பராமரிக்க அனுமதி உள்ளது.
ஆனால், பெரும்பாலான மாட்டின் உரிமையாளர்கள், பால் கரக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் மாடுகளை கூவம் கரையோரம், மார்க்கெட் பகுதிகள் மற்றும் சாலைகளில் திரிய விடுகின்றனர். அவ்வாறு திரியும் மாடுகள், மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
அரும்பாக்கத்தில், பள்ளி சென்று தாயுடன் வீடு திரும்பிய சிறுமியை, மாடு கொம்பால் குத்தி துாக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், நங்கநல்லுார் உழவர் சந்தை அருகே, கண்ணன், 51, என்பவரை மாடு முட்டி காயப்படுத்தியது.
பல இடங்களில், சாலையில் செல்வோரை, மாடுகள் முட்டுவதும், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதும் தொடர்ந்து நடக்கிறது.
இந்நிலையில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த, சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, பொது தொழுவத்தை ஏற்படுத்துதல், அபராத தொகையை அதிகரித்தல் போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டில் இதுவரை, 3,500க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டு, 65 லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
ஆனாலும், மாட்டின் உரிமையாளர்கள், மாடுகளை சாலையில் திரியவிடுகின்றனர். பெரும்பாலான மாட்டின் உரிமையாளர்களுக்கு, தங்களது வீடுகளில் மாடுகளுக்கான போதிய இடம் இல்லாதது முக்கிய பிரச்னையாக உள்ளது.
எனவே, மாடுகளை பராமரிப்பதற்காக, மாநகராட்சிக்கு உரிய சில இடங்களில் பொது தொழுவம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது, புதுப்பேட்டை, பெரம்பூரில் மாநகராட்சி தொழுவம் உள்ளது.
அதேபோல், மாநகராட்சி திறந்தவெளி இடங்களில், மாடுகளை பராமரிக்க, பொதுத் தொழுவம் அமைக்கப்படும். இல்லையென்றால், மாநகராட்சி எல்லைக்கு வெளியே அமைக்கலாமா எனவும் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அமைக்கப்படும் தொழுவத்தில் வாடகைக்கு, கட்டணம் அல்லது இலவசம் போன்றவை, அரசின் முடிவுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது, பிடிபடும் மாட்டின் உரிமையாளர்களுக்கு 2,000 ரூபாய்; மாடுகளை உரிமையாளர்கள் அழைத்து செல்லும் வரை ஒரு நாளைக்கு கூடுதலாக 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இவற்றை உயர்த்தி வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், முதல் முறை மாடு பிடிபட்டால் 5,000 ரூபாய்; இரண்டாம் முறை 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசிடம் ஒப்புதல் கோரப்பட உள்ளது. அரசு மற்றும் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தின் ஒப்புதலுக்குப் பின், இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
முதலில் நங்க நல்லூரில் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாடுகள் ரோட்டில் போவோரை மிரட்டி வருகிறது .இனப்பெருக்கத்திற்காக ஜல்லிக்கட்டு காளையை போல் பெரிய காளைகளை தெருவில் மேய விட்டு இருக்கிறார்கள்