கூடங்குளத்தில் ஜெனரேட்டர்களை மீட்க கடலில் கற்களை கொட்டி பாதை பணி ஜரூர்
நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் இந்தியா, ரஷ்யா கூட்டு முயற்சியில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு ஏற்கனவே தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகிறது.
3வது மற்றும் 4வது அணு உலைகளின் இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
கூடுதலாக 5வது மற்றும் 6வது அணு உலைகளின் துவக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்காக ரஷ்யாவில் இருந்து கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி கடல் மார்க்கமாக 310 டன் எடை கொண்ட ரூ. 600 கோடி மதிப்புள்ள இரண்டுஸ்டீம் ஜெனரேட்டர்கள் கடல்மார்க்கமாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தன.
கடந்த 8 ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கடல் மார்க்கமாக 'பார்ஜர்' எனப்படும் மிதவை கப்பல் மூலமாக 2 ஸ்டீம் ஜெனரேட்டர்களும் இழுவை கப்பலில் கூடன்குளம் அணு உலைக்கு கொண்டு வரப்பட்டன.
அணு உலை வளாக பின் புற கடல் பகுதியிலிருந்து சுமார் 300 மீ துாரத்தில் ஸ்டீம் ஜெனரேட்டர்கள் அணு உலையை நெருங்கியபோது எதிர் பாராத விதமாக 'பார்ஜர்' மிதவைக் கப்பலின் இணைப்பு உலோக கம்பி வடம் அறுந்ததால் கடல் அலைகளின் சீற்றத்தின் காரணமாக கடற்பாறையில் சிக்கியது.
ஸ்டீம் ஜெனரேட்டர்களை மீட்கும் முயற்சியாக இலங்கையிலிருந்து அதிக விசைத்திறன் கொண்ட 2 இழுவை கப்பல்கள் வரவழைப்பட்டு ஸ்டீம் ஜெனரேட்டர்களை பாதுகாப்பாக மீட்க முயற்சிகள் நடந்தன. ஆனால் அது பலனளிக்க வில்லை.
இந்நிலையில் அணு உலை விஞ்ஞானிகளிடையே மாற்று வழி ஆலோசிக்கபட்டது. அதன்படி கடந்த 5 தினங்களாக அணு உலை வளாகத்தில் இருந்து ஸ்டீம் ஜெனரேட்டர்கள் நிற்கும் பகுதிக்கு துாண்டில் பால அமைப்பின் படி சுமார் 3 முதல் 4 டன் வரை எடை கொண்ட கற்களை கொட்டி பாதை அமைத்து மீட்க முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் ரூ. 2 கோடியில் கடலில் பாதை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிவடையும் நிலை உள்ளதால் ஸ்டீம் ஜென ரேட்டர்கள் அதி நவீன கிரேன் மூலம் கடல் பாதை மூலம் மீட்கப்பட்டு அணு உலைக்கு கொண்டு செல்லப்படுமென அணு உலை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஸ்டீம் ஜெனரேட்டர்கள் மும்பை இன்சூரன்ஸ் கம்பெனியில் ஏற்கனவே காப்பீடு செய்யப்பட்டிருப்பதால் அதன் அதிகாரிகளும் கூடன் குளம் கடல்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!