அரிசி கொம்பனுக்கு மஸ்து சுற்றுலா பயணியருக்கு தடை
கேரள மாநிலம் இடுக்கி மற்றும் தேனி மாவட்ட வனப்பகுதியில் திரிந்த அரிசி கொம்பன் யானையை, கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியான கோதையார், முத்துக்குளிவயல் பகுதியில் விட்டனர்.
கோதையாறு அணைப்பகுதியில் திரிந்த அரிசி கொம்பன், சில நாட்களாக மாஞ்சோலை எஸ்டேட் ஊத்து, நாலுமுக்கு பகுதிகளில் சுற்றித் திரிகிறது.
நேற்று எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்களை சேதப்படுத்தியது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இது குறித்து, முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா கூறியதாவது:
யானை கண்ணுக்கு மேல் மஸ்து உள்ளது. இதனால் ஆக்ரோஷமாக உள்ளது. மிகவும் அட்டகாசம் செய்து வருகிறது. அதை சரி செய்ய மருத்துவக்குழுவினர் முயற்சிக்கின்றனர். அதன் பின்னர் யானை முண்டந்துறை அடர்வனப்பகுதியில் விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரிசிக்கொம்பன் யானை சுற்றி திரிவதால், மாஞ்சோலை எஸ்டேட் பகுதிக்கு சுற்றுலா பயணியர் வர வேண்டாம் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
சுற்றுலா தலங்கள் மூடல்
கொடைக்கானலில் வன சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், குணா குகை, துாண்பாறை, பைன் பாரஸ்ட் ஆகியவை உள்ளன.
ஒரு வாரமாக பேரிஜம் ஏரிப்பகுதியில் முகாமிட்டிருந்த நான்கிற்கும் மேற்பட்ட காட்டு யானைகளால், பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு வனத்துறை தடை விதித்திருந்தது.
நேற்று முன்தினம் இரவு, மோயர் சதுக்கத்தில் உள்ள கடைகளில் உணவு பொருட்களை யானைகள் சேதப்படுத்தின.
இதையடுத்து, சுற்றுலா பயணியர் பாதுகாப்பு கருதி, யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வன சுற்றுலா தலங்கள் நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!