Advertisement

மணல் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ.,வை கொன்ற இருவருக்கு ஆயுள்; 5 மாதங்களில் தீர்ப்பு

துாத்துக்குடி:மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலரை, அலுவலகத்தில் புகுந்து வெட்டிக் கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, துாத்துக்குடி கோர்ட்
உத்தரவிட்டது.

துாத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் லுார்து பிரான்சிஸ், 53. தாமிரபரணி கரையோர கிராமங்களில் நடந்த ஆற்று மணல் கடத்தலை தடுத்தார்.கலியாவூர் ராமசுப்பிரமணியன், 41, மணல் கடத்தலில் ஈடுபட்டார். இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மணல் கடத்தல் குறித்து 2023 ஏப்., 13ல் வி.ஏ.ஓ. லுார்து பிரான்சிஸ் முறப்பநாடு போலீசில் புகார் செய்தார்.

அந்த வழக்கில் ராமசுப்பிரமணியன், துாத்துக்குடி கோர்ட்டில் முன் ஜாமின் பெற முயற்சித்தும்
கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரம்அடைந்தார். ஏப்., 25ல் முறப்பநாடு வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்த லுார்து பிரான்சிசை ராமசுப்பிரமணியன், அவரது கூட்டாளி மாரிமுத்து, 31, அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.
ராமசுப்பிரமணியன், மாரிமுத்துவை முறப்பநாடு போலீசார் கொலை வழக்கிலும், குண்டர் சட்டத்திலும் கைது செய்தனர். இந்த வழக்கில், விரைந்து விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது.
துாத்துக்குடி மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், நீதிபதி செல்வம், குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள்தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்துதீர்ப்பளித்தார்.
வி.ஏ.ஓ., கொலை வழக்கில் ஐந்து மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. துாத்துக்குடி முதன்மை செஷன்ஸ் கோர்ட் வளாகத்தில், இந்த வழக்கின் தீர்ப்பு எதிரொலியாக, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில் ஆஜரான அரசு வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல்கூறியதாவது:ஜூன் 21ல் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். ஆரம்பத்தில் ஸ்ரீவைகுண்டம் கீழமை நீதிமன்றத்தில் இருந்த வழக்கு, 15 நாட்களில் துாத்துக்குடி செஷன்ஸ் கோர்ட் வந்தது.ஆக., 21ல் விசாரணை துவங்கியது. மொத்தம், 52 சாட்சிகளில், 31 பேர் விசாரிக்கப்பட்டனர்; 51 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தினமும் விசாரணை நடந்தது. இடையில் இரண்டாவது குற்றவாளி மாரிமுத்து தரப்பில், இந்த கொலைக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என தாக்கல் செய்யப்பட்ட மனுவால் சில தினங்கள் தாமதமானது.விடுமுறை நாட்கள் தவிர்த்து, 22 நாட்களில் விசாரித்து, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ஐகோர்ட்டும், அஸ்ரா கர்க்கும்!



வி.ஏ.ஓ., கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற, உயர் நீதிமன்ற கிளையில், புதுக்கோட்டை காந்திமதிநாதன் மே 9ல் பொதுநல வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி, 'வழக்கை விரைந்து நடத்த வேண்டும். ஒரு மாதத்திற்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து, தினமும் வழக்கு நடத்தி இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.
அப்போது, தென்மண்டல ஐ.ஜி.,யாக இருந்த அஸ்ரா கர்க், வழக்கை தீவிரமாக கண்காணிப்பதால், போலீசாரே விசாரணையை விரைந்து முடிப்பர் என, உயர் நீதிமன்றம் நம்பிக்கைதெரிவித்தது. அதற்கேற்ப விசாரணையை முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ஜமாலிடம் இருந்து, துாத்துக்குடி டி.எஸ்.பி., சுரேஷ் விசாரிக்க மாற்றப்பட்டது. எஸ்.பி., பாலாஜி சரவணன், டி.எஸ்.பி., சுரேஷ் விசாரணையை தீவிரப்படுத்தி விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement