திருநெல்வேலி : நாங்குநேரியில் மாணவர், அவரது தங்கை வெட்டப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும், கீழநத்தம் ஊராட்சி வார்டு தி.மு.க., கவுன்சிலர் ராஜாமணி வெட்டிக் கொலை செய்யப்பட்டதால், மாவட்டத்தில் பதட்டம் நிலவுகிறது.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னத்துரை, 17, அவரது சகோதரி சந்திராசெல்வி, 14, ஆக., 9 இரவில், சக மாணவர்களால் வெட்டப்பட்டனர்.
இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதில் ஈடுபட்ட ஆறு சிறார்கள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அரசு கூடுதல் கவனம் செலுத்துகிறது.
நேற்று முன்தினம் அமைச்சர் தங்கம் தென்னரசு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நிதி வழங்கினார். அமைச்சரின் மொபைல் போனில் இருந்து முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் அம்பிகாவதியிடம் ஆறுதல் கூறினார்.
நேற்று அமைச்சர்கள் சுப்பிரமணியன், கயல்விழி மாணவர்களிடம் ஆறுதல் கூறினர். ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர் ரகுபதி நாங்குநேரியில் ஆய்வு செய்தார்.
இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு நாங்குநேரி கோர்ட் அருகே நம்பி நகரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், வானமாமலை என்பவர் வீட்டின் முன் சரமாரியாக பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
நம்பி நகரில் வசிக்கும் வானமாமலை மற்றும் கபாலி கண்ணன் இடையே விரோதம் உள்ளது. கபாலி கண்ணனின் தோட்டத்தை, வானுமாமலை தரப்பினர் சேதப்படுத்தினர். இதற்கு பதிலடியாக கபாலி கண்ணனின் மகன் நவீன் உள்ளிட்ட ஆறு பேர் கும்பல் வானமாமலை வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பினர்.
இதில், வீட்டு கண்ணாடிகள், சோபா உள்ளிட்ட பொருட்கள் சேதமுற்றன. யாருக்கும் காயமில்லை.
வள்ளியூரில் சில நாட்களுக்கு முன், 'யூ டியூப்' பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்த சிறார்கள் சிலர் ஒரு வீட்டின் மீது வீசினர். அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டனர். இதில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த ஒரு சிறுவனை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, நாங்கு நேரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கீழநத்தம் ஊராட்சி, 2வது வார்டு தி.மு.க., உறுப்பினர் ராஜாமணி நேற்று மாலை, சாட்டுப்பாலம் அருகே ஆடுகளை மேய விட்டிருந்தார். அங்கு மது அருந்திய ஒரு கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். படுகாயமடைந்த அவர், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நேற்றிரவு இறந்தார். அவரும் பட்டியல் இனத்தவர்.
கொலையாளிகள் வேறு சமூகத்தவர் என, விசாரணையில் தெரிந்தது.
மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த சட்டம் ஒழுங்கு சீர்கேடு சம்பவங்களால் தொடர் பதட்டம் நிலவுகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!