Advertisement

அபராதம் வசூலிப்பதே ஒரே இலக்கு போக்குவரத்து போலீசாரால் தி.நகரில் அவதி

தி.நகர்:போக்குவரத்தை முறைப்படுத்தாமல், உயரதிகாரிகளின் 'அழுத்தம்' எனும் பெயரில், அபராதம் வசூலிப்பதையே இலக்காக வைத்து செயல்படும் தி.நகர் போக்குவரத்து போலீசாரால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

'மடக்கி பிடிக்கிறேன்' என்ற பெயரில், சாலையின் குறுக்கே திடீரென புகும் இவர்களால், பெண்கள் முதியோர் விபத்தில் சிக்குகின்றனர்.

போக்குவரத்து போலீசார் வெயில் மழை பாராமல், மக்களுக்கு சேவை ஆற்றி வருகின்றனர். அதில் பணியாற்றும் பெரும்பாலான போலீசார், பொதுமக்களிடம் நல்ல உறவையும் பேணி வருகின்றனர்.

ஆனால், -தி.நகரில் துரைசாமி சாலையில், சுரங்கப்பாதையை ஒட்டி வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார், அபராதம் வசூலிப்பதையே இலக்காக வைத்து செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து, தி.நகர் பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

சென்னையின் வர்த்தக மையமாக தி.நகர் உள்ளது. தற்போதைய வளர்ச்சிக்கும், மக்கள் தொகைக்கும் ஏற்ப சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை.

குறிப்பாக, எந்நேரமும் போக்குவரத்து அதிகம் உள்ள தி.நகர் துரைசாமி சாலையில் வணிக வளாகங்கள், பிரியாணி கடைகளுக்கு வரும் நபர்கள், அத்துமீறி வாகனங்களை விருப்பம் போல் ஆங்காங்கே நிறுத்துகின்றனர்.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை முறைப்படுத்த, போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை.

மாறாக, சுரங்கப்பாதையின் மறு கரையில், வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். நான்கு பேர் நின்றாலே போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவிலான குறுகிய சாலையில், போக்குவரத்து போலீசார் குழுவாக சோதனையில் ஈடுபடுகின்றனர்.

திடீரென சாலையின் குறுக்கே புகுந்து, வாகன ஓட்டிகளை மடக்க முயலுகின்றனர்.

இதனால், சம்பந்தப்பட்டவர் பதற்றத்தில் வாகனத்தை அதிவேகமாக இயக்க முயல்வதாலோ அல்லது திடீரென 'பிரேக்' போடுவதாலோ, பிற வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கின்றனர்.

சமீபத்தில் கூட, முதியவர் ஒருவர் இங்கே கீழே விழுந்தார். இதை கண்டுகொள்ளாத போலீசார், அபராதம் விதிப்பதிலேயே குறியாக இருந்தனர்.

இதுமட்டுமல்லாமல், வாகன ஓட்டிகளை மடக்கி, விசாரிப்பது போல விசாரித்து அனுப்பி வைக்கின்றனர்.

ஆனால், ஓரிரு நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக, 1,000 ரூபாய் முதல் அபராதம் விதிக்கப்பட்டதாக, மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வருகிறது.

எதற்காக அபராதம் என்பது கூட தெரியாமல், வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது.

இது ஒருவிதத்தில் வழிப்பறிக்கு சமம் என, மக்கள் புலம்புகின்றனர்.

அத்துடன், விதிமீறும் வாகன ஓட்டிகளாலும், போக்குவரத்து போலீசாராலும் தி.நகரில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது.

இது குறித்து வாகன ஓட்டிகள் கேள்வி கேட்டால், உயரதிகாரிகளின் அழுத்தம் காரணமாக இலக்கு நிர்ணயித்து அபராதம் விதிப்பதாக, போக்குவரத்து போலீசார் நழுவி விடுகின்றனர்.

எனவே, இந்த விவகாரத்தில் உயரதிகாரிகள் தலையிட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement