Advertisement

வீட்டுமனை அபகரிப்பு: மாஜி அதிகாரிகளுக்கு 3 ஆண்டு

சென்னை:போலி ஆவணங்கள் வாயிலாக, வீட்டு மனையை அபகரிப்பு செய்த அரசு அதிகாரிகள் இருவர் உட்பட மூன்று பேருக்கு, தலா, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் காமராஜ். இவர், 1989ம் ஆண்டு செப்., 22ல், மணலி கடப்பாக்கம் கிராமத்தில், 2,400 சதுர அடி வீட்டு மனையை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து வாங்கினார்.

மனைக்கு, 6,100 ரூபாய் முன்பணம் செலுத்தி, ஒதுக்கீடு ஆணையையும் பெற்றார். வீட்டு மனைக்கான மீதி தவணை தொகை 49,650 ரூபாயை, டாக்டர் காமராஜ் செலுத்தியுள்ளார். முழு தவணைகளும் செலுத்திய பின், வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து கிரைய ஆவணம் பெற முயற்சித்தார்.

ஆனால், சொத்துக்கு இறுதி விலை நிர்ணயம் செய்யவில்லை எனக் கூறி, வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் டாக்டர் காமராஜை அலைக்கழித்துள்ளனர்.

இது குறித்து, எழும்பூர் மத்திய குற்றப்பிரிவில், டாக்டர் காமராஜ் அளித்தார். விசாரணையில், 'வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் உதவியுடன், அயனாவரம் பகுதியில் வசித்து வரும் காமராஜ் என்பவர் தான், வீட்டு மனையின் உரிமையாளர் போல் ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்கள் வாயிலாக சொத்தை விற்று முறைகேடு செய்தது' தெரியவந்தது.

இதையடுத்து, வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் மாணிக்கம், பாண்டுரங்கன், தம்பிதுரை, ஆள்மாறாட்ட நபர் காமராஜ், விஜயன், அந்தோணி குணாளன், பாஸ்கரன் ஆகியோர் மீது, நம்பிக்கை மோசடி, கூட்டுச்சதி என, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, ஆள்மாறாட்ட நபர் காமராஜ், வீட்டு வசதி அதிகாரி தம்பிதுரை ஆகியோர் இறந்து விட்டனர். மீதமுள்ள நபர்கள் மீதான வழக்கு, நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி டி.ராஜேஷ் ராஜு முன் விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களுக்கு பின் பிறப்பித்த உத்தரவு:

குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பு நிரூபித்துள்ளது. அரசு அதிகாரிகள், தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சொத்தை 18 லட்சம் ரூபாய்க்கு விற்று, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, குற்றவாளிகள் அந்தோணி குணாளன், வீட்டு வசதி வாரிய முன்னாள் அதிகாரிகள் மாணிக்கம், பாண்டுரங்கன் ஆகியோருக்கு, தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், மொத்தம் 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

சொத்தை அபகரித்து மன உளைச்சல் ஏற்படுத்திய குற்றத்துக்கு, நஷ்ட ஈடாக 10 லட்சம் ரூபாயை, உண்மையான உரிமையாளர் டாக்டர் காமராஜுக்கு வழங்க வேண்டும். விஜயன், பாஸ்கரன் விடுவிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement