அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவம் அதிகரிப்பு சபாஷ் ! நம்பிக்கை அளித்து கர்ப்பிணியருக்கு சிகிச்சை
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பேறுகாலப் பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை உட்பட பல பிரிவுகள் செயல்படுகின்றன. தினம் புறநோயாளிகளாக 2,500 பேர் சிகிச்சை பெறுகின்றனர். உள் நோயாளிகள் தங்கி சிகிச்சைக்கு 765 படுக்கைகள் உள்ளன.
காஞ்சிபுரம் மட்டுமின்றி திருவண்ணாமலை, வேலுார் மாவட்டங்களைச் சேர்ந்தோர் வருகின்றனர். இந்த மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு 200க்கும் மேற்பட்டோருக்கு பேறுகாலம் பார்க்கப்படுகிறது.
பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் பெண்களுக்கு, அனைத்து பரிசோதனைகளும் எடுக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தவிர, உரிய முறையில் அவர்களை கவனித்து, தகுந்த ஆலோசனை வழங்குவதால், இம்மருத்துவமனையில் சுகப்பிரசவம் அதிகரித்துள்ளது.
மருத்துவமனை அதிகாரி கூறியதாவது:
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், சில கர்ப்பிணியர், மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பர்; தைரியமாக இருப்பர். அவ்வாறு இருக்கும் பெண்களுக்கு, சுகப்பிரசவம் நடக்கும். இம்மருத்துவமனையில் 70 சதவீதம் சுகப்பிரசவம் நடக்கிறது.
சில பெண்கள் வலி தாங்குவதற்கு விரும்புவதில்லை. குடும்பத்தாரும் அறுவை சிகிச்சை எளிது என விரும்புகின்றனர். அவர்கள் சம்மதத்தோடு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
இவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து வருகிறோம். உரிய ஒத்துழைப்பு கொடுத்தால் சுகப்பிரசவ சதவீதம் மேலும் அதிகரிக்கும்.
குழந்தைக்கு ஏதாவது பிரச்னை இருந்தால், குணமாகும் வரை மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும். மற்றபடி, சுகப்பிரசவம் நடந்த மூன்று நாட்களில் வீட்டுக்கு செல்லலாம். அறுவை சிகிச்சை என்றால், ஏழு நாட்கள் தங்கி செல்ல வேண்டும்.
குழந்தைக்கு, எப்போதெல்லாம் தடுப்பூசி போட வேண்டும் என்பன உள்ளிட்ட அனைத்து ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. முதல் குழந்தையை, அறுவை சிகிச்சை மூலம் பெற்ற பெண்களுக்கு, இரண்டாவது குழந்தை சுகப்பிரசவம் சம்பவமும் நடந்துள்ளது.
கடந்த ஆண்டு மூன்று பெண்களுக்கும், இந்த ஆண்டு ஒரு பெண்ணுக்கும் இரண்டாவது குழந்தை சுகப்பிரசவமாக நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவமனையில் முன்பு, பேறுகாலம் முடிந்த பின், அவர்களை கவனிக்கும் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, பேறுகால பிரிவு என, தனித்தனியான கட்டடம் இருந்தது.இரு ஆண்டுகளுக்கு முன், மருத்துவமனை வளாகத்தில் ஐந்து அடுக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.அதில் பேறுகாலம், பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, பேறுகால தீவிர சிகிச்சை பிரிவு போன்ற வசதிகள், ஒரே கட்டடத்தில் அமைந்துள்ளன.பேறு காலத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியர் 'ஸ்கேன்' எடுப்பதற்கு தவிர, மற்ற சிகிச்சைக்கு வேறு எங்கும், அலைய வேண்டிய அவசியம் இருக்காது.
ஆண்டு மொத்தம் சுகப்பிரசவம் சிசேரியன்2021 5,495 3,101 23942022 5,541 3,306 2,235மே 2023 2,040 1,152 888
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!