Advertisement

கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி - -2 திட்டம் ஜூலையில்...சோதனை ஓட்டம்!:ஆகஸ்டில் வினியோகத்தை துவக்க அதிகாரிகள் முடிவு

ADVERTISEMENT
'சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, 1,516 கோடி ரூபாயில், கடல்நீரை குடிநீராக்கும் 'நெம்மேலி- - 2' திட்டத்தில், அடுத்த மாதம் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. வரும் ஆகஸ்ட் முதல், தென்சென்னை பகுதிக்கு குடிநீர் வினியோகம் துவங்கும்' என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சென்னை குடிநீர் வாரியம் வாயிலாக, 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி வழியாக வினியோகம் செய்ய, தினமும் 110 கோடி லிட்டர் குடிநீர் தேவை.

தற்போது, 100 கோடி லிட்டர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த குடிநீர் பூண்டி, சோழவரம், புழல், தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் நீர்நிலைகள் மற்றும் மீஞ்சூர், நெம்மேலி- - 1 கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து பெறப்படுகிறது.

'நெம்மேலி - 1' திட்டத்தில், 10 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து அடையாறு, ஆலந்துார், கண்ணகி நகர், பெரும்பாக்கம், சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், 'நெம்மேலி- - 2' திட்டத்தில், 1,516 கோடி ரூபாயில், 15 கோடி லிட்டர் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.

இதில், கடல்நீரை உட்கொள்ளும் குழாய், உவர் நீரை வெளியேற்றும் குழாய் ஆகியவை கடலில் பதிக்கப்பட்டு உள்ளன.

மேலும், குடிநீர் வினியோகத்திற்காக, 48 கி.மீ., துாரத்தில் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, 85 சதவீத பணிகள் முடிவடைந்துஉள்ளன. அனைத்து பணிகளையும், அடுத்த மாத இறுதிக்குள் முடிக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, குடிநீர் சோதனை ஓட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனால், வரும் ஆக., மாதத்தில் இருந்து, 15 கோடி லிட்டர் கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சென்னை மக்களுக்கு தற்போது, பற்றாக்குறையின்றி குடிநீர் கிடைக்கிறது. போதிய அளவுக்கு ஏரி நீர் கிடைத்தாலும், வறட்சியின் போது சமாளிக்க, தொலைநோக்கு பார்வையில், கடல்நீர் குடிநீராக்கப்படுகிறது. வரும் ஜூலை இறுதியில் அனைத்து பணிகளையும் முடித்து, 'நெம்மேலி- - 2' திட்டத்தில் குடிநீர் சோதனை ஓட்டம் துவங்கும். ஆகஸ்டில் குடிநீர் வினியோகம் செய்யப்படும். மூன்றாவது திட்டத்திற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்த பணியும், விரைவில் துவங்கும்.

-குடிநீர் வாரிய அதிகாரிகள்

10 லட்சம் பேர் பயனடைவர்



 நெம்மேலி- - 2 திட்டம், 1,516 கோடி ரூபாயில் துவங்கியது. கட்டுமானம், 20 ஆண்டுகள் பராமரிப்பு, இயக்குதல் என்ற அடிப்படையில், 2019 மே 27ம் தேதி, 'கோப்ரா - டெக்டான்' கன்சார்டியன்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது

 கட்டுமான பணி, 2020 அக்., 28ம் தேதி துவங்கியது. கடல்சார் பணிகள், இயந்திரவியல், மின் இணைப்பு, குழாய் பதிப்பு, நீரேற்று நிலையங்கள் கட்டுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன

 கடல்சார் பணியில், 2,250 மி.மீ., விட்டம் கொண்ட, 1,035 மீட்டர் நீளத்தில், கடல்நீர் உட்கொள்ளும் குழாய் பதிக்க வேண்டும். இதில், 1663 அடி நீளத்தில் குழாய் பதிக்கப்பட்டது

 அதேபோல், சுத்திகரித்த பின் உவர் நீரை கடலில் வெளியேற்ற, 1,600 மி.மீ., விட்டம் கொண்ட, 2086 அடி நீளத்தில் குழாய் பதிக்க வேண்டும். இதில், 1968 அடி துாரம் பதிக்கப்பட்டு உள்ளது

 சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வினியோகிக்க, 48.10 கி.மீ., துாரத்தில், 300, 1,000, 1,200 மற்றும் 1,400 மி.மீ., விட்டம் கொண்ட குழாய் பதிக்கப்படுகிறது. மொத்த பணிகளில், 85 சதவீத பணிகள் முடிந்தன

 இத்திட்டத்தால், தென்சென்னையில் மாநகராட்சி மற்றும் ஊராட்சியைச் சேர்ந்த வேளச்சேரி, ஆலந்துார், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், கீழ்க்கட்டளை, மூவரசம்பேட்டை, உள்ள கரம்-புழுதிவாக்கம், மடிப்பாக்கம், சோழிங்கநல்லுார் மற்றும் ஓ.எம்.ஆர்., ஐ.டி., நிறுவன பகுதிகளில் உள்ள, 10 லட்சம் மக்கள் பயனடைவர்.

3வது திட்டம்



கடல்நீரை குடிநீராக்கும், 3வது திட்டம், கிழக்கு கடற்கரை சாலை, பேரூரில் துவக்கப்பட உள்ளது. இத்திட்டம், 6,078 கோடி ரூபாயில், 40 கோடி லிட்டர் உற்பத்தி திறனில் அமைக்கப்பட உள்ளது.

இப்பணியை, 'வாபேக்' என்ற நிறுவனம் எடுத்துள்ளது. இத்திட்டம் பயன்பாட்டுக்கு வரும் போது, சென்னையின், 75 சதவீத குடிநீர் தேவையை, கடல்நீரில் இருந்து பூர்த்தி செய்ய முடியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
- -நமது நிருபர் --



வாசகர் கருத்து (1)

  • shyamnats - tirunelveli,இந்தியா

    ஏதோ ஆறுகளே இல்லாத பாலைவன நாடுகள், செய்வது போன்ற முஸ்தீபுகள், ஆறுகள் நிறைந்த தமிழகத்தில் தேவையா? இத்தனை ஆயிரம் கோடிகளை கொண்டு முறையாக நீர்வளங்களை, வழிமுறைகளை நன்றாக செயல் படுத்தலாம். ஒவ்வொருமுறை பெரும் மழை பெய்யும் போதும், அண்டை மாநிலங்களில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படும் பொழுதும், வீணாக கடலில் போய கலப்பதை தடுத்து, சேமித்தால் இத்தகைய ஆலைகளுக்கு தேவை இருக்காது. இவ்வாலைகளுக்கு தேவைப்படும் மின்சாரம் போன்றவையும் மிச்சமாகும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement