கூட்டுக்குடிநீர் திட்ட பணி திருத்தணியில்... ஜவ்வு! கோடையில் தண்ணீருக்கு தவிக்கும் மக்கள்
திருத்தணி நகராட்சியின் 21 வார்டுகளில், 14 ஆயிரம் குடும்பத்தில், 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு, 90 லிட்டர் குடிநீர் வீதம், 45 லட்சம் லிட்டர் குடிநீர், நகராட்சிக்கு தேவைப்படுகிறது.
தற்போது, அரக்கோணம் கூட்டுக்குடிநீர், அருங்குளம் கொற்றலை ஆற்றில் மூன்று கிணறுகள் மற்றும் நகராட்சியில் போடப்பட்டுள்ள, 30 ஆழ்துளை கிணறுகளில் இருந்து, ஒரு நாளைக்கு 20 - 30 லட்சம் லிட்டர் மட்டுமே பெறப்படுகிறது.
இதனால் மழைக்காலத்தில், மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தெருக்குழாயில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கோடை காலத்தில், வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்குவதால், திருத்தணியில் கடும் குடிநீர் பிரச்னை இருந்தது.
இந்நிலையில், 2020ல், திருப்பாற்கடலில் இருந்து திருத்தணி நகருக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் ஏற்படுத்த, 115 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகள் துவங்கின.
கூட்டுக்குடிநீர் சேமிப்பதற்கு, திருத்தணி சேகர்வர்மா நகரில், 3.60 லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் தேக்கும் நீர்உந்து நிலையம், இந்திரா நகர் பகுதியில், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய குடிநீர் மேல்நிலைத் தொட்டி பணிகள் முடிந்து, தயார் நிலையில் உள்ளன.
எனினும், எஞ்சிய பணிகள் மந்தகதியில் நடப்பதால், இவற்றில் இருந்து குடிநீர் வினியோகம் எப்போது துவங்கும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால், திருத்தணியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இது குறித்து நகராட்சி ஆணையர் ராமஜெயம் கூறியதாவது:
தமிழ்நாடு வடிகால் வாரியத்தின் வாயிலாக 'டெண்டர்' விடப்பட்டு, திருத்தணியில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.
நகராட்சியில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. மேலும் வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதற்கு, குழாய் இணைப்பு பணிகள் முழுமையாக முடிந்துள்ளன.
திருப்பாற்கடலில் இருந்து திருத்தணிக்கு 70 கி.மீ., துாரம் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள், 95 சதவீதம் முடிந்துள்ளன.
மீதமுள்ள பணிகள் முடிந்தால், திருப்பாற்கடல் தண்ணீர் திருத்தணி, சேகர்வர்மா நகர் குடிநீர் சேமிப்பு தொட்டிக்கு வந்தடையும்.
மேலும், இந்திரா நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி, தெருக்குழாய்களுக்கு சோதனை ஓட்டமாக விடப்படும்.
தமிழ்நாடு குடிநீர் வாரியத்திற்கு, கடந்த ஏப்ரல் மாதத்திற்குள் பணிகள் முழுமையாக முடித்து ஒப்படைக்க வேண்டும் என, ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தோம்.
ஆனால், சிறு சிறு வேலைகள் உள்ளதாக, வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முழுமையான பணிகள் எவ்வளவு, மீதமுள்ள பணிகள் எவ்வளவு, எப்போது குடிநீர் சோதனை ஓட்டம் ஆரம்பிக்கப்படும் என்பது குறித்து, வரும் 7ம் தேதி நகராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருத்தணி நகரில் பல ஆண்டுகளாக கோடை காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெரும்பாலான வீடுகளில் பணம் கொடுத்து, டிராக்டர் மூலம் எடுத்துவரப்படும் குடிநீர், வீட்டு தொட்டிகளில் நிரப்பி வருகின்றனர்.
தவிர குடிப்பதற்கு ஒரு குடம் தண்ணீர், 2-- - 5 ரூபாய் கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். தற்போது கோடைக்காலம் என்பதால், நகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு, கூட்டுக்குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, திருத்தணி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!