கிராம நத்தம் நிலத்தின் கட்டுப்பாடுகள் தளர்கிறது வணிக திட்டங்களுக்கு சி.எம்.டி.ஏ., அனுமதி
சென்னை பெருநகர் பகுதியில், கிராம நத்தம் நிலங்களில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள், தொழில், வணிக கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.
சென்னை பெருநகருக்கான இரண்டாவது முழுமை திட்டப்படி, நிலங்கள் குடியிருப்பு, வணிகம், தொழில், விவசாயம், நீர் நிலை என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. பயன்பாடு அடிப்படையில் இந்த வகைப்பாடுகள் அமலில் உள்ளன.
இதில், கிராம நத்தம் நிலங்களில் திட்ட அனுமதிக்கு சில கட்டுப்பாடுகளை அதிகாரிகள் விதிக்கின்றனர்.
கிராம நத்தம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டாலும், அதை வழக்கமான பட்டா நிலங்களாக அதிகாரிகள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
வழக்கமான பட்டா உள்ள ஒரு கிரவுண்ட் நிலத்தில், எட்டு வீடுகள் வரை கட்டுவதற்கு அனுமதி கிடைக்கும் நிலையில், கிராம நத்தம் நிலங்களில் மூன்று வீடுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:
கிராம நத்தம் என்ற நில வகைப்பாடு தொடர்பாக, அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
தனியார் பெயரில் பட்டா வழங்கப்பட்ட கிராம நத்தம் நிலங்களை, அரசின் 'தமிழ் நிலம்' சாப்ட்வேரில் 'ரயத்துவாரி நிலம்' என குறிப்பிட உத்தரவிடப்பட்டு உள்ளது.
நில நிர்வாக ஆணையரின் இந்த உத்தரவின் அடிப்படையில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் சில முடிவுகளை எடுத்துள்ளனர்.
இதன்படி, கிராம நத்தம் என்ற வகைப்பாட்டில் வரும் பட்டா நிலங்களை வழக்கமான பட்டா நிலமாக கருதலாம். இந்நிலங்களில், அடுக்குமாடி குடியிருப்புகள், நிறுவனங்கள், தொழில், வணிக கட்டுமான திட்டங்களை அனுமதிக்கலாம்.
பொது கட்டட விதிகளுக்கு உட்பட்டு, இது போன்ற கட்டுமான திட்டங்களுக்கான அனுமதியை வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிகள் பரிசீலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பயன் என்ன?
சி.எம்.டி.ஏ.,வின் இந்த முடிவால், கிராம நத்தம் நிலங்களுக்கான சந்தை மதிப்பு அதிகரிப்பதுடன் அதன் உரிமையாளர்களுக்கு, சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் வரும். மக்களின் வீடு தேவை பூர்த்தியாவதற்கு புதிய வழி ஏற்பட்டுள்ளது.
-கட்டுமான துறையினர்
- நமது நிருபர் -
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!