மெரினா, அண்ணா சதுக்கத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட பேருந்து நிலையம் பணி முடிவடைந்துள்ளதால், விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
சென்னை, மெரினா கடற்கரை அருகிலுள்ள அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதனால், இந்த பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால், பேருந்து நிலையம் திறந்தவெளியில் இருந்ததால் வெயில், மழை போன்ற காலங்களில் பொதுமக்கள் ஒதுங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்தனர்.
இதையடுத்து, அதிகமானோர் வந்து செல்வதால், இங்கு நிழற்குடை அமைக்க வேண்டுமென, நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.
இந்நிலையில், அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம் அருகில், பெரிய அளவிலான காலி இடம் இருந்தது. அந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க, மாநகராட்சி மற்றும் போக்குவரத்து துறை முடிவு செய்தன.
கடந்த இரு மாதங்களுக்கு முன், அங்கு பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்கும் பணி துவங்கியது. அதற்கான கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன.
தற்போது, கட்டுமான பணி முடிவடைந்துள்ளது. இங்கு ஒரே நேரத்தில், 500க்கும் அதிகமானோர் நிற்கலாம்.
இனி வெயில், மழைக்காலம் ஆகியவற்றில் பொதுமக்கள் சிரமமின்றி பேருந்துகளில் ஏறி பயணம் செய்யலாம்.
இந்த பிரமாண்டமான பேருந்து நிலையம், விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!