சென்னையின் சாலைகளையும் சிங்காரமாக பராமரிக்க உத்தரவு
சென்னை, 'சிங்கார சென்னை என்ற பெயருக்கு ஏற்ற வகையில் சாலைகளை பராமரிக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கவுன்சிலர்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், பொதுமக்கள் ஆகியோர் அளிக்கும் அனைத்துவித புகார்களுக்கும் ஒரே விதமான முக்கியத்துவம் அளித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில புகார்களுக்கு தீர்வு காண முடியாத பட்சத்தில், உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பின், அச்சாலைகள் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடிகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
மாநகராட்சி கட்டடங்கள், சுற்றுச்சுவர்களில் வண்ணம் பூசி அழகாக பராமரிக்க வேண்டும்.
மேலும், சிங்கார சென்னை என்ற பெயருக்கு ஏற்ற வகையில், சாலைகளை உரிய தரத்துடனும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். அதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
குறிப்பாக, தி.நகர், அண்ணா நகர், பெசன்ட் நகர், அடையாறு, பிராட்வே, மெரினா, திருமங்கலம், வளசரவாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாலை மேம்படுத்தப்பட்டு, தரத்துடன் பராமரிக்க வேண்டும்.
அதேபோல், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளையும் அழகுப்படுத்த வேண்டும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை, அத்துறையின் அனுமதியுடன் அச்சாலைகளையும் பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!