கடலில் மீன்பிடிக்க சங்கங்களுக்கு அனுமதி மறுப்பு மீன்வள துறை திட்டவட்டம்
காசிமேடு, மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, தமிழகத்தில், ஏப்., 15 நள்ளிரவு முதல் ஜூன் 14 வரையிலான 61 நாட்களுக்கு, மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதையடுத்து, காசிமேடு மீனவர்கள், ஏப்., 15 முதல், பெரிய விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. சிறியவகை பைபர் படகுகளில் 9 நாட்டிங்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், தடை முடியும் நாட்களுக்கு முன்னதாக, 46 நாட்களிலே அதாவது ஜூன் 1 முதல் கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதாக, காசிமேடு துறைமுக விசைப்படகு சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு அறிவித்தது.
இதற்கு அனுமதி கோரி, காசிமேடு மீன்வள துணை இயக்குனர் அலுவலகத்தில், ஒருங்கிணைப்பு குழு மனு அளித்தது.
இம்மனுவை பெற்ற மீன்வளத் துறை, தடை நாட்கள் முடியும் வரை கடலுக்கு செல்லக்கூடாது என திட்டவட்டமாக கூறியது.
இந்நிலையில், விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:
கேரளாவைப் போல தமிழகத்திலும், மீன்பிடி தடை காலத்தை 52 நாட்களாக குறைக்க வேண்டும்.
தடை உள்ள 61 நாட்களில் இலங்கை, வங்க தேசம், தாய்லாந்து, தைவான் போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த படகுகள், வங்காள விரிகுடா கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கின்றனர்.
தவிர, மீன்பிடி தடை காலத்தில், கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் பைபர் படகுகள், 28 அடி நீளம் 15 ஹெச்.பி., திறன் உடையதாக இருக்க வேண்டும். மீன் பிடித்து, ஒரே நாளில் கரை திரும்ப வேண்டும்.
ஆனால், 70 அடி நீளமுள்ள பைபர் படகுகளில், 75 ஹெச்.பி., திறன் உடைய ஐந்து இன்ஜின்களை பயன்படுத்தி கடலுக்குள் செல்கின்றனர்.
உடன், ஐஸ், உணவு பொருட்களை எடுத்துச் சென்று 10 நாட்கள் அங்கேயே தங்கி, மீன் பிடித்து திரும்புகின்றனர். இதை தடுக்க, மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இப்பிரச்னையில், பைபர் படகு மற்றும் விசைப்படகு உரிமையாளர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல், மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!