Advertisement

கிளாம்பாக்கத்தோடு நிறுத்தப்படும் வெளியூர் பேருந்துகள்வருகிறது தடை!:சென்னை வரும் பக்கத்து மாவட்ட பயணியருக்கு சிக்கல்

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறப்புக்கு பின், வெளியூர் பேருந்துகள் சென்னை நகருக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. இதனால், அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோருக்கு, பல இடங்களில் பேருந்து மாறி செல்லும் கட்டாயம் ஏற்படும் என, கருதப்படுகிறது. இந்த இடியாப்ப சிக்கலுக்கு தீர்வு காண, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு உள்ளது. கடந்த 2019ல் துவங்கிய பணிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. சொற்ப பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

இங்கு, 40 ஏக்கரில், 400 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள நிலையத்தில், இணைப்பு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பேருந்து நிலையத்தை சுற்றிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்கான மாற்று நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

வெளியூர் பயணியர் பாதுகாப்புக்காக, புதிய காவல் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இந்த பணிகள் முடிவடைந்து, பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின், அரசு போக்குவரத்து கழகங்களின் வெளியூர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அதே போல, வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள், சென்னைக்குள் அனுமதிக்கப்பட்டால், பழையபடி போக்குவரத்து நெரிசல் தொடரும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கருதுகின்றனர்.

இதனால், சென்னை மாநகர பேருந்துகள் அல்லாத வெளியூர் பேருந்துகள், சென்னை நகருக்குள் வராத படி, தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை துவக்கியுள்ளனர்.

இது குறித்து தாம்பரம் போலீஸ் கமிஷனருக்கு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின், சென்னை மாநகர பேருந்துகள் அல்லாத அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சென்னைக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.

உரிய காரணத்துடன் அனுமதி உத்தரவு இருக்கும் பேருந்துகள் தவிர்த்து, வேறு எந்த வெளியூர் பேருந்தும், சென்னைக்குள் செல்ல அனுமதிக்கக் கூடாது. இதற்கு தேவையான உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தென் மாவட்ட பேருந்துகள், கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுவதில், சில குழப்பங்கள் உள்ளன. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் என்றால் மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட பேருந்துகள் என, பலரும் நினைக்கின்றனர்.

ஆனால், அரசு அறிவிப்பை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. சென்னையில் இருந்து செங்கல்பட்டு வழியாக வெளியூர்களுக்கு செல்லும் அனைத்தும், தென் மாவட்ட பேருந்துகளாக வரையறுக்கப்பட்டு உள்ளன.

எனவே, விழுப்புரம் முதல் கன்னியாகுமரி வரையிலான அனைத்து வெளியூர் பேருந்துகளும், கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எனவே, சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த பயணியருக்கு சிக்கல் ஏற்படும் என கருதப்படுகிறது. இவர்கள் கிளாம்பாக்கத்தில் இறங்கி, மாநகர பேருந்துகளின் மூலம் சென்னைக்குட்பட்ட பகுதிகளுக்கு வர நேரிடும்.

தடையில் எழும் சந்தேகங்கள்!


கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டபோதும், தனியார் நிறுவன வெளியூர் பேருந்துகள், நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டது. ஆனால் சிலர், குறிப்பிட்ட காரணங்கள் அடிப்படையில், நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றனர். இன்று வரை, குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களின் ஆம்னி பேருந்துகள், சென்னைக்குள் வந்து செல்கின்றன.இந்த பின்னணியில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்த பின், வெளியூர் பேருந்துகள் தாம்பரம் வழியாக சென்னைக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், தம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், விழுப்புரம், வேலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது.குறிப்பாக, கிழக்கு கடற்கரை சாலை வழியாக, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் எப்படி இயக்கப்படும் என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.


- நமது நிருபர் -



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement