திருவள்ளூர் உட்கோட்டம் கட்டுப்பாட்டில் உள்ள வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் - கீழச்சேரி மாநில நெடுஞ்சாலை, மணவாளநகர் - மேல்நல்லாத்துார் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள், முதல்வரின் சாலை விரிவாக்கத்திட்டத்தின் கீழ் 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2022ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது.
இதில், வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் - கீழச்சேரி மாநில நெடுஞ்சாலை 120ல் ஒன்பது கி.மீ., துாரம், இரு வழிச்சாலையாக இருந்த நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக 81 கோடி ரூபாய் மதிப்பில், 17 சிறுபாலங்களுடன் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதேபோல சிங்கபெருமாள்கோவில் - ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் - நெற்குன்றம் நெடுஞ்சாலை 57ல் மணவாளநகர் - அத்திகுளம் வரை 4.1 கி.மீ., துாரமுள்ள சாலை, 49 கோடி ரூபாய் மதிப்பில் இரு வழிச்சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடக்கிறது.
இதில், 12 சிறுபாலங்களுடன் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி சில இடங்களில் மந்த கதியில் நடந்து வருகிறது.
இந்த இரு சாலை விரிவாக்கத்தில் மப்பேடு ஊராட்சியில் 1,200 கோடி மதிப்பில் அமையவுள்ள பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவிற்கு வாகனங்கள் வந்து செல்ல மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது பணிகள் மந்தகதியில் நடந்து வருவதால் திட்டமிட்டபடி வரும் ஆகஸ்டில் நிறைவேறுமா என்ற கேள்வி, வாகன ஓட்டிகளிடையே எழுந்து உள்ளது.
நான்கு பெண்கள் பலி
முதல்வரின் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ், மப்பேடு - சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலை 120ல் பணிகள், மந்தகதியில் நடந்து வருகிறது.
கடந்த 24ம் தேதி புதுப்பட்டு அருகே சென்ற ஷேர் ஆட்டோ, சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பில் மோதியது. இந்த விபத்தில் நான்கு பெண்கள் பலியானது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ், நடந்து வரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து விரைந்து முடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. திட்டமிட்டபடி வரும், ஆகஸ்ட் மாதம் பணிகள் நிறைவடையும்' என கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!