காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரண்டாவது பெரிய ஏரியாக உத்திரமேரூர் ஏரி உள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு முன் நந்திவர்ம பல்லவ மன்னரால் உருவாக்கப்பட்ட வைரமேகன் தடாகம் என மற்றொரு பெயரும் இந்த ஏரிக்கு உள்ளது.
இந்த ஏரி 20 அடி ஆழம் உடையது. மழைக்காலத்தில் முழுமையாக நிரம்பும் போது, 18 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும்.
வேடபாளையம், மேனலுார், அரசாணிமங்கலம், காட்டுப்பாக்கம், காக்க நல்லுார், புலியூர், நல்லுார் உள்ளிட்ட 18 கிராமங்களில் உள்ள 5,636 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.
விரிசல்
ஏரியின் உபரிநீர், நெல்வாய் மடுவு வழியாக மதுராந்தகம் ஏரிக்கும், காவனுார் புதுச்சேரி, கம்மாளம்பூண்டி, அரசாணிமங்கலம் மற்றும் அத்தியூர் ஆகிய கிராமங்களுக்கும் செல்கிறது.
இது, உத்திரமேரூரில் இருந்து, 8 கி.மீ., துாரத்தில் உள்ள அனுமந்தண்டலம் செய்யாற்று அணைக்கட்டு, உத்திரமேரூர் ஏரிக்கான நீர்வரத்து ஆதாரமாகவும் உள்ளது.
செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அனுமந்தண்டலம் அணைக்கட்டு நிரம்பி, அங்கிருந்து வரத்து கால்வாய் வாயிலாக, உத்தரமேரூர் ஏரிக்கு தண்ணீர் சென்றடைவது வழக்கம்.
ஆனால், கடந்த ஆண்டு உத்திரமேரூர் பெரிய ஏரியில், செல்லியம்மன் கோவில் அருகிலும் வேறு சில பகுதிகளிலும் ஏரிக்கரை திடீரென விரிசல் ஏற்பட்டது.
அதையடுத்து தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், சேதமான ஏரிக்கரை பகுதி முழுமையாக சரி செய்யப்படவில்லை.
இதனால், செய்யாற்றில் இருந்து, உத்திரமேரூர் ஏரிக்கு தண்ணீர் சென்றால் ஏரி முழுமையாக நிரம்பி, ஏரிக்கரை பகுதி உடைப்பு ஏற்படும் அபாயம் உருவானது.
இதனால், கடந்த ஆண்டு செய்யாற்று அணைக்கட்டு தண்ணீரை உத்திரமேரூர் ஏரிக்கு வருவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
முன்னெச்சரிக்கை
இதனால், ஏரி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குறிப்பிட்ட அளவு தண்ணீர் மட்டும், கடந்த ஆண்டு தேக்கி வைக்கப்பட்டது.
உத்திரமேரூர் ஏரிக்கரையில் விரிசல் மற்றும் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை சீரமைத்து, ஏரிக்கரையை பலப்படுத்தி, மதகுகளையும் பராமரிக்க விவசாயிகள் கோரி வந்தனர்.
விவசாயிகளின் இக்கோரிக்கையை ஏற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மத்திய அரசின் 'ஜல்சக்தி' துறை சார்பில், ஆர்.ஆர்.ஆர்., திட்டத்தின்கீழ் 18.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது இதற்கான பணிகள் துவங்கப்பட்டு, சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உத்திரமேரூர் வட்டார நீர்வளத்துறை இளநிலை பொறியாளர் மார்க்கண்டன் கூறியதாவது:
உத்திரமேரூர் ஏரி புனரமைக்கும் பணியின் முதற்கட்டமாக உத்திரமேரூர் பெரிய ஏரியில் கரை ஓரத்தில் வெள்ள தடுப்பு சுவர் ஏற்படுத்தும் பணி முடிவுற்று உள்ளது. தற்போது, காட்டுப்பாக்கம் அருகே உள்ள சித்தேரியில் கரையோர வெள்ள தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை தொடர்ந்து, மதகுகள் சீர் செய்தல் மற்றும் ஏரிக்கான வரத்து கால்வாய்கள் பழுது பார்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
அடுத்த ஓராண்டில் பணி நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!