திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர், தாமிரபரணி ஆறு மூலம் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்கிறது.
கடந்தாண்டு அக்டோபர், நவம்பரில் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் திருநெல்வேலி ,தென்காசி மாவட்ட அணைகள் வறட்சியாக உள்ளன.
திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் 86 ஆயிரம் ஏக்கரில் வடகிழக்கு பருவமழையின் போது, பிசான நெல் சாகுபடி செய்யப்படும்.
ஜூன், ஜூலையில் தென்மேற்கு பருவ மழையின் போது, கார் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும்.
மொத்தம், 142 அடி உயரமுள்ள பாபநாசம் அணையில், தற்போது 29 அடி மட்டுமே நீர் உள்ளது. 118 அடி உயரமுள்ள மணிமுத்தாறு அணையில், 63 அடி நீர் மட்டுமே உள்ளது.
பாபநாசம் அணையில் இருந்து 25 கன அடி தண்ணீர் தான் வெளியேறுகிறது.
தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி அணைகள் காத்திருக்கின்றன.
பாபநாசம் அணையில் நீர்மட்டம் குறைந்து விட்டதால், வழக்கமாக ஜூன் 1ல் திறக்கப்படும் அணை, இன்று திறக்க வாய்ப்பில்லை.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூனில் துவங்கி, நான்கு மாதங்களுக்கு சீசன் நிலவும். தற்போது சீசனுக்கான கடைகளை திறக்க, அவற்றை பராமரிக்கும் பணி நடக்கிறது.
ஆனால் சுற்றுலா பயணியர் வருகைக்காக குற்றாலம் நகராட்சி எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை.
குற்றாலம் மெயின் அருவி அருகில் 2003ல் துவக்கப்பட்ட நீச்சல் குளம், அதற்கு முன் செயல்பட்ட பாம்பு பண்ணை, பூங்காக்கள் பராமரிப்பின்றி மூடியே கிடக்கின்றன.
மழையில்லாததால் அருவிகளில் இன்னும் தண்ணீர் விழவில்லை. விரைவில் சீசன் துவங்க வாய்ப்புள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!