திருநெல்வேலியில் நகைக்கடை நடத்தி வருபவர் விஸ்வநாத். இவரது மகன் சுஷாந்த் 32. வடமாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திருநெல்வேலியில் நகைக் கடை நடத்தி வருகின்றனர். சுஷாந்தின் மாமனார் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் நகைக்கடை நடத்தி வருகிறார். மாமனாரிடம் பணம் கொடுத்து நகைகள் வாங்கி வருவதை சுஷாந்த் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
நேற்று காலை சுஷாந்த் அவரது உதவியாளர் விஷால் 22, ஆகியோர் கேரளாவுக்கு காரில் சென்றனர். சுஷாந்த் காரை ஓட்டினார் . காலை 7:00 மணியளவில் சுஷாந்தின் காரை இரண்டு கார்கள் பின் தொடர்ந்தன. மூன்றடைப்பு கடந்ததும் நான்கு வழிச்சாலையில் மேம்பாலத்தில் கார் ஏறும்போது பின் தொடர்ந்தவர்கள் சுஷாந்த் கார் மீது மோதி நிறுத்தினர். சுஷாந்தையும் விஷாலையும் தாக்கினர்.
விஷால் தப்பி ஓடினார். பாலத்தில் வந்த ஆம்னி பஸ் டிரைவர் மற்றும் பயணிகள் பஸ்சை நிறுத்தி என்ன தகராறு என இறங்கி விசாரித்தனர். இதையடுத்து அந்த கும்பல் சுஷாந்தை காருக்குள் தள்ளி அவர்களே ஓட்டிச் சென்றனர்.
நாங்குநேரி நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடிக்கு முன் இடதுபுறம் திரும்பும் நெடுங்குளம் கிராம சாலையில் காரை ஓட்டிச் சென்றனர். காட்டுப் பாதைக்கு சென்று சுஷாந்தை இறக்கி விட்டதோடு காரிலிருந்த ரூ 1.5 கோடி பணத்துடன் அந்த கும்பல் தாங்கள் வந்த கார்களில் தப்பினர். இது குறித்து சுஷாந்த் அங்கிருந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
கேமராவை பார்த்தவர் தகவல்
நெடுங்குளத்தில் கார் வேகமாக செல்வதை தமது வீட்டு சிசிடிவி மூலம் பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். மூன்றடைப்பு மற்றும் நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். பணத்தை கொள்ளையடித்த கும்பல் நாங்குநேரி சுங்கச்சாவடியை தாண்டி நாகர்கோவில் சாலையில் செல்லவில்லை.
அவர்கள் மீண்டும் திருநெல்வேலி நோக்கி திரும்பி இருக்கலாம் என தெரிகிறது.
பணத்தை பறித்த கும்பலில் 8 பேர் இருந்ததாகவும் அவர்கள் தன் மீது மிளகுத்தூளை தூவியதாகவும் முகமூடி அணிந்திருந்ததாகவும் சுஷாந்த் தெரிவித்துள்ளார். எஸ்.பி., சிலம்பரசன் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.
உண்மையா...
சுஷாந்த் வழக்கமாக அதிகளவில் பணம் கொண்டு செல்வதை ஏற்கனவே நோட்டமிட்ட கும்பல் இதில் ஈடுபட்டுள்ளது.
சுஷாந்தும் முன்னுக்குப் பின் முரணான தகவல் கூறுகிறார். எனவே 1.5 கோடி ரூபாய் பணம் கொள்ளை போனது உண்மையா, கொள்ளையர்கள் யார் என தனிப்படையினர் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!