ஒரே நிமிடம்; 46 தீர்மானங்கள் ஆல் பாஸ் நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் அதிரடி
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில், ஏற்கனவே நிறைவேற்றப்படாமல் இருந்தவை உட்பட 46 தீர்மானங்களை, ஒரே நிமிடத்தில் வாசித்து, நிறைவேற்றப்பட்டதாக மேயர் அறிவித்தார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் மார்ச் 31 மற்றும் ஏப்., 28ல் நடந்த மாநகராட்சி கூட்டங்களில் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது; தி.மு.க., கோஷ்டி மோதல் சர்ச்சைகள் ஏற்பட்டன.
மாவட்ட செயலராக இருந்த எம்.எல்.ஏ., அப்துல் வகாப் மாற்றப்பட்டு, முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் நியமிக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, மற்றும் கவுன்சிலர்களை அழைத்து, மைதீன்கான் கூட்டம் நடத்தினார்.
அப்போது அவர், 'கூட்டத்தில், அரசு குறிப்பிட்டு அனுப்பும் அனைத்து தீர்மானங்களையும் பிரச்னை இல்லாமல் நிறைவேற்ற வேண்டும்.
கூச்சல் குழப்பம் ஏற்படுத்தக் கூடாது' என அறிவுறுத்தினார்.
அதன்படி, நேற்று கூட்டம் நடந்தது.
வழக்கமாக மாநகராட்சி ஊழியரோ, மக்கள் தொடர்பு அதிகாரியோ ஒவ்வொரு தீர்மானமாக வாசிப்பார். ஆனால், நேற்று மேயர் சரவணனே, ஒரே வரியில் அனைத்து தீர்மானங்களின் எண்களை மட்டும் கூறி, தீர்மானம் 'பாஸ்' ஆனதாக கூறி முடித்தார்.
அதன் பிறகு, கவுன்சிலர்கள் தங்கள் பகுதி குறைகளை தெரிவித்து பேசினர். மாநகராட்சி பகுதியின் பல்வேறு கால்வாய்கள் மூலம் தாமிரபரணி ஆற்றில் மாசு ஏற்படுகிறது. எனவே, அவற்றை அடியோடு நிறுத்த வேண்டும் என பல கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 1.000 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து தரத்தை கண்காணிக்க வேண்டும் என கவுன்சிலர் உலகநாதன் வலியுறுத்தினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!