30 டன் கேரள கழிவு பறிமுதல் லாரி டிரைவர், புரோக்கர் கைது
தென்காசி: கேரளாவில் இருந்து தென்காசிக்கு பிளாஸ்டிக், தெர்மாகோல், மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர், ஆலங்குளத்தைச் சேர்ந்த புரோக்கர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சிமென்ட், கனிம வளம், காய்கறிகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் திரும்பி வரும்போது, அங்கிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை ஏற்றி வந்து, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வயல்கள் ஒதுக்குப்புற இடங்களில் கொட்டிச் செல்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
கழிவுகளை ஏற்றி வரும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசு அறிவித்திருந்தது. இதன்படி, தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நேற்று சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற லாரியை சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில், பிளாஸ்டிக், மருத்துவக் கழிவுகள், தெர்மாகோல் கழிவு போன்ற சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும், 30 டன் கழிவுகள் இருந்தது தெரியவந்தது.
ஆலங்குளம் போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். டிரைவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஜோசன் ராஜ் மற்றும் கழிவுகளை ஆலங்குளம் அருகே கொட்டுவதற்கு இடம் பார்த்துக் கொடுத்த உள்ளூர் புரோக்கர்ஆறுமுகம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!