டி.டி.சி.பி., அனுமதி பெறாத கட்டடங்களை திறந்து வைத்த அமைச்சர் நேரு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் டிரேட் சென்டர் உள்ளிட்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட கட்டுமான பணிகளுக்கு டி.டி.சி.பி., (நகர ஊரமைப்பு இயக்ககம்) மற்றும் பல்வேறு துறைகளின் அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருப்பது தகவல் பெறும் உரிமை சட்டத்தின் பெறப்பட்ட ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சியில் 2017ல் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அமல்படுத்தப்பட்டது. 1000 கோடி ரூபாய் மதிப்பில் பஸ் ஸ்டாண்ட்கள், பூங்காக்கள், டிரேட் சென்டர், மார்க்கெட் வளாகம் போன்றவை கட்டப்பட்டுள்ளன.
78.51 கோடி ரூபாயில் ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் கட்டடம், பொருட்காட்சி திடலில் 56.71 கோடி ரூபாயில் டிரேட் சென்டர், பேட்டையில் 14.5 கோடி ரூபாயில் கனரக சரக்கு லாரி நிறுத்து மையம், பாளை பஸ் ஸ்டாண்ட் அருகே வணிக வளாகம் போன்றவை கட்டப்பட்டுள்ளன.
இந்த கட்டடங்களுக்கு அரசின் டி.டி.சி.பி., அனுமதி பெறப்படவில்லை. 18 மீட்டர் உயரமுள்ள ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் கட்டடத்திற்கும் தீயணைப்புத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை என பல்வேறு துறைகளில் முன் அனுமதி பெறப்படவில்லை.
பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு முன்பு பொதுமக்களிடம் காண்பிக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் மாதிரி வடிவம் வேறு மாதிரி இருந்தது. ஆனால் தற்போது பஸ் ஸ்டாண்டுக்குரிய வசதிகள் இல்லாமல் ஒரு இன்ஜினியரிங் கல்லுாரி வளாகம் போல கட்டப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக செயல்பாட்டாளர் பெர்டின் ராயன் மாநகராட்சியில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கேட்டிருந்த மனுவிற்கு மாநகராட்சி செயற்பொறியாளர் வாசுதேவன் பதில்கள் அளித்துள்ளார். அதில் மாசுகட்டுப்பாட்டு வாரியம், நெடுஞ்சாலைத்துறை, டி.டி.சி.பி., போலீஸ் என எந்த துறைகளிடமிருந்தும் முன் அனுமதி பெறவில்லை.
நகர ஊரமைப்பு இயக்க அதிகாரிகள் ஏற்கனவே நடத்திய நேராய்வில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பொது இடங்கள் குறைவாக இருப்பதாகவும் ஒரு கட்டடத்திற்கும் இன்னொரு கட்டடத்துக்கும் இடையில் உள்ள இடமும் மிக குறைவாக இருப்பதாகவும் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பதாகவும் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே காரணங்களை காட்டி விண்ணப்பிக்கும் போது அதிகாரிகள் கொடுத்த தகவலுக்கும், தற்போது உள்ள கட்டுமானத்திற்கும் முரண்பாடுகள் இருப்பதாக கூறி, தீயணைப்பு துறையினரும் அனுமதி வழங்க மறுத்துள்ளனர். இந்த தகவல்கள் ஆர்.டி.ஐ., மூலம் பெறப்பட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரு, மே 25ம் தேதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முடிந்த பணிகளை திறந்து வைத்தார்.
ஏற்கனவே திறந்து அரசு இலக்கிய விழாக்கள் நடத்தப்பட்ட நேருஜி கலையரங்கத்தை அவர் மீண்டும் திறந்து வைத்தார். ட்ரேட் சென்டர் உள்ளிட்ட அனுமதி பெறாத கட்டடங்களையும் அமைச்சர் திறந்து வைத்தார். ஆனால் அவர் கட்டடங்களை நேரில் சென்று பார்வையிடவில்லை.
பொதுமக்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் திறப்பது குறித்து அதிகாரிகளோ அமைச்சரோ எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் ஐங்ஷன் பஸ் ஸ்டாண்ட் திறப்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லை எனவும் கூறப்படுகிறது
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!