திருநெல்வேலி மாநகராட்சியில், 2017ல் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதில், 1,000 கோடி ரூபாயில் பஸ் ஸ்டாண்ட், பூங்கா, வணிக மையம், மார்க்கெட் வளாகம் பணிகள் துவக்கப்பட்டன.
ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள பழைய பஸ் ஸ்டாண்டை இடித்து, 78.51 கோடி ரூபாயில், புதிய பஸ் ஸ்டாண்ட்கட்டும் பணி துவங்கியது.
மாநகராட்சி கட்டடத்திற்கு எதிரே உள்ள பழமையான பொருட்காட்சி திடலில், 56.71 கோடி ரூபாய் செலவில், 'டிரேட் சென்டர்' கட்டப்பட்டது. பேட்டையில், 14.5 கோடி ரூபாயில் கனரக சரக்கு லாரி நிறுத்தும் மையம் கட்டப்பட்டது.
ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட், வணிக மையம் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டடங்களுக்கு, அரசின் டி.டி.சி.பி., எனப்படும் நகர ஊரமைப்பு இயக்கத்தின் அனுமதி பெறப்படவில்லை.
அதுபோல, பஸ் ஸ்டாண்ட் கட்டடத்திற்கும், தீயணைப்புத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், நெடுஞ்சாலை, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன் அனுமதி பெறப்படவில்லை.
பஸ் ஸ்டாண்ட் கட்டும் முன் பொதுமக்களிடம் காண்பிக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் மாதிரி வடிவம் வேறு மாதிரி இருந்தது. தற்போது பஸ் ஸ்டாண்டுக்குரிய வசதிகள் இல்லாமல், வணிக வளாகம் போல கட்டப்பட்டுள்ளது.
ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம் குறித்து மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் சுடலைகண்ணு, உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில், முறைகேடுகள் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடக்கிறது.
காலதாமதம்
கடந்த 2017ல் துவக்கப்பட்ட, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள், மூன்று ஆண்டுகளில் நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆனால், கால தாமதமாகிறது. ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் மூடப்பட்டு ஆறு ஆண்டுகளாக திறக்கப்படாததால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காததால், அந்த நிதியை செலவழிப்பதில் சிக்கல் உள்ளது.
இதனால் மாநகராட்சியின் வரி வருவாய் மூலம் கிடைக்கும் பொதுநிதியையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு எந்த முன் அனுமதியின்றி மாற்றம் செய்யப்படுகிறது.
திருநெல்வேலி மாநகராட்சியில் வரும் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்ட கட்டுமான பணிகள் முடிவு பெற்றும், பஸ் ஸ்டாண்ட் போன்றவை பயன்பாட்டுக்கு வராதால், பொதுமக்கள் தமிழக அரசு மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.
ஆமா கட்டி முடிச்ச கட்டிடத்திற்கு அதிகார பூர்வ அப்ரோவள் கிடையாது